Feb 7, 2010

தமிழ் கணினியில் நான் கடந்து வந்த சில அனுபவங்கள்..

வணக்கம் நண்பர்களே,

நான் ஒரு சாதாரண கணனி பாவனையாளர் மட்டுமே. கடந்த 1995 லிருந்து
கணனியில் தமிழைப் பாவித்து வரும் ஒரு சாதாரண தமிழன்.
ஆரம்பத்தில் கடிதங்கள் எழுத (அச்சிட) மட்டும் தமிழை கணனியில் பாவித்தேன்.
அப்போது பாவனையில் இருந்த ‘ரசிகப்பிரியா’ ( இது பாமினி ரகத்தைச்
சேர்ந்தது) என்னும் எழுத்துருவினை ஒரு குறுந்தகட்டில் போட்டு விற்றார்கள்.
கனடிய டொலர் 25.00 க்கு வாங்கி எனது முதற் கணனியான விண்டோஸ் 3.1 ல் ஏற்றினேன்.

பின்னர் கட்டுரைகள், கதைகள் போன்றவற்றின் தலைப்புக்களை அழகுபடுத்துவதற்காக சரஸ்வதி, சிந்துபைரவி என்னும் எழுத்துருக்களை ஒவ்வொன்றும் 25 டொலர் கொடுத்து வாங்கினேன். காரணம், கணனியில் தமிழைக்காணும்போது ஏற்பட்ட மகிழ்ச்சி.

[குறிப்பு:- இந்த எழுத்துருக்கள் எல்லாம் பாமினி வகையைச்சேர்ந்தனவே. இந்த
எழுத்துருக்களை Ethno Multimedia என்னும் தமிழ் கனடிய நிறுவனம் தயாரித்து விற்பனை செய்து வந்தது.]

1996 ல் என்று நினைக்கின்றேன், தமிழில் வலைப்பக்கம் உருவாக்க வேண்டும்
என்ற ஆவல் மேற்கொள்ளவே அச்சேற்றுதலுக்குரிய எழுத்துருவாகக்
காணப்பட்ட ‘பூபாளம்’ என்னும் எழுத்துருவை விலை கொடுத்து வாங்கினேன்.

[குறிப்பு:- விலை கொடுத்து வாங்கினேன் என்று குறிப்பிடுவதன் காரணம்,
இப்போது இந்த எழுத்துருக்களும் இன்னும் நூற்றுக்கணக்கான எழுத்துருக்களும்
இணையத்தில் இலவசமாகப் பெறக்கூடியதாக இருக்கின்றன.]

முடிவில் ஒரு வழியாக தமிழில் வலைப்பக்கம் ஒன்றை உருவாக்கி வலையேற்றமும் செய்தேன். ஆனால் நான் ஆசைப்பட்டபடி அது முழு வெற்றி அளிக்கவில்லை. இதன்பின்னர்தான் ‘பாமினி’ எழுத்துருவைப் பற்றி அறிந்து அதன் உரிமையாளரிடம் அங்கீகாரம் பெற்று பாமினி எழுத்துருவைக்கொண்டு தமிழில் வலைப்பக்கம் (Home Page) ஒன்றை வெற்றிகரமாக வலையேற்றம் செய்தேன்.

இப்படியே எனது ஆராச்சி தமிழ் இணையத்தில் செல்லவே 1997 ல் முரசு அஞ்சல் பற்றி இணையம் வாயிலாக அறிந்தேன். பின்னர் ‘தமிழ் நெற்’ மடலாடல் குழு பற்றியும் அறிந்தேன். அதில் அங்கத்தவன் ஆனேன். அதன் மூலம் திரு.பாலா, திரு.முத்து, திரு.பழனி, திரு.சிங்கை கிருஷ்ணன், திரு.மணியம் இன்னும் எத்தனையோ பெயர் குறிப்பிடாத [அவர்கள் என்னை மன்னிக்கவும்]
தமிழ் அன்பர்கள், ஆவலர்கள், கணனி வல்லுனர்கள் போன்றோர் பழக்கமானார்கள்.
இதன் மூலம் முரசு அஞ்சல் பற்றிய போதிய விளக்கமும் அறிவுறுத்தல்களும்
எனக்கு கிடைக்க ஆரம்பித்தன.
விளைவு, எனது தமிழ் வலைப்பக்கங்கள் எல்லாம் ‘பாமினி’ எழுத்துருவிலிருந்து
விடுபட்டு இணைமதி எழுத்துருவுக்கு மாற்றப்பட்டன.

[குறிப்பு:- இதற்கு முக்கியமான காரணங்களில் ஒன்று தமிழை கணனியில் உள்ளீடு
செய்யும் முறை எனக்கு மிகவும் இலகுவாகவும் பிடித்தும் இருந்தது.]

நாட்கள் நகர்ந்தன. மைக்ரோசொப்ட்டும் இயங்குதளங்களை மாற்றியது.
இணைய உலாவிகளும் தரம் உயர்த்தப்பட்டன. இதன் காரணமாக இணைமதி
எழுத்துருவில் உருவாக்கப்பட்ட பக்கங்களில் சில சிக்கல்கள் தோன்றத் தொடங்கின…
அப்போதுதான் TSCII உருவாக்கப்பட்டது. நண்பர்கள் சிலரின் பரிந்துரையின்
பின்னர் TSC எழுத்துருவுக்கு எனது பக்கங்களை மாற்றினேன்.
இதன் மூலம் தமிழ் TSCII எழுத்துருக்களை கணனியில்
வைத்திருப்பவர்கள் எந்த பிரச்சனையும் இன்றி சில மாற்றங்களை உலாவியில்
ஏற்படுத்தி விட்டு தமிழைப் பிழையின்றி படிக்க முடிந்தது.

பின்னர் என்ன நடந்தது? மைக்ரோசொப்ட்டும் இயங்குதளங்களை மாற்றியது.
இணைய உலாவிகளும் தரம் உயர்த்தப்பட்டன. மீண்டும் பிரச்சனை.
TSCII எழுத்துருவில் உள்ள பக்கங்களில் ‘இ’ யைக் காணவில்லை.

இப்படியிருக்கையில் TAB/TAM என்னும் ஒரு குறியீடு தலை காட்டியது.
அதன் பின்னால் ஓட்டம். யார் ‘இ’ ஐ விட்டுவிட்டு தமிழைப் படிக்க முடியும்.
சிலர் ‘இ’ க்குப் பதிலாக ‘யி’ போட்டார்கள். சிலர் ‘i’ என்னும் ஆங்கில எழுத்தை
பிரதியீடு செய்தார்கள். தமிழ் ஆவலர்கள் அவதிப்பட்டார்கள்,
எங்கே தமிழில் ‘இ’ அழிந்துவிடுமோ என்று.

‘எழில் நிலா’ TAB குறியீட்டிற்கு மாற்றப்பட்டது. திரு.குமார் மல்லிகார்ஜுனன் அவர்களின் அனுமதியுடன் அவரின் ‘TABMalli’ என்னும் எழுத்துருவில் ‘எழில் நிலா’ பக்கம் மீண்டும் வலையேறியது.
அப்போது ‘எழில் நிலா’ வின் தமிழ் பக்கங்களின் எண்ணிக்கை 60 ற்கும் மேல்.
[குறிப்பு:- எழில் நிலா ஒரு சஞ்சிகை அல்ல. இன்னமும் அது எனது Home Page தான்] சளைக்கவில்லை நானும். இரவோடிரவாக திரு. மணி. மணிவண்ணனின்
எழுத்துரு மாற்றியின் உதவியுடன் TAB ற்கு மாறிவிட்டேன்.

பின்னர் டைனமிக் தொழில் நுட்பம் வந்தது. எழுத்துருவின் அழகியல்
காரணங்களுக்காகவும் தமிழ் எழுத்துருவை சுலபமாக இணையத்திலிருந்து
இறக்கி கணனியில் ஏற்ற இன்னமும் தெரியாமல் இருக்கும் தமிழ்
கணனிப்பயனாளர்கள் நன்மை கருதியும் இந்த தொழில் நுட்பத்தை
எழில் நிலாவில் சேர்த்தேன்.

பின்னர் என்ன நடந்தது? மைக்ரோசொப்ட்டும் இயங்குதளங்களை மாற்றியது.
இணைய உலாவிகளும் தரம் உயர்த்தப்பட்டன. மீண்டும் பிரச்சனை.
TAB இல் உருவாக்கப்பட்டிருந்த தமிழ் பக்கங்களில் ‘புள்ளி’ பிரச்சனை.
[உதாரணமாக எழுத் துக் கள் இப் படிக் காட் சி தந் தன.]
[குறிப்பு:- ஆனால் சில எழுத்துருக்களில் இந்த பிரச்சனை காணப்படவில்லை
என்பதும் எனது பரிசோதனை அனுபவம். உதாரணத்திற்கு ஒன்று TABKuzhali எழுத்துரு]

இது இப்படி இருக்க TSCII 1.6 குறியீடு திருத்தப்பட்டது. ‘இ’ பிரச்சனை தீர்க்கப்பட்டது.
[இதனை திருத்தி அமைக்கப் பாடுபட்ட அனைத்து கணனி வல்லுனர்களையும் பாராட்ட வேண்டும்.]
நானும் விடுவேனா? எழில் நிலா தமிழ்ப்பக்கங்கள் அனைத்தும் மீண்டும்
TSCII 1.7 க்கு மாற்றப்படுகின்றன. அத்துடன் அப்போது திரு.சிங்கை கிருஷ்ணன்
அவர்களுக்காக ‘சைவமும் தமிழும்’ என்ற வலைத்தளத்தை உருவாக்கி
அவருடைய கட்டுரைகளை அதில் போட்டு அதனை பராமரித்தும் வந்தேன்.
அதில் உள்ள 55-60 கட்டுரைகளையும் கூட TSCII 1.7 க்கு மாற்றினேன்.
நிம்மதி பிறந்தது.

இப்போது TSCII 1.7 ற்கு என்ன? அதில் ஏதோ பிழை இருக்கின்றதாம்.
யுனிக்கோட்டிற்கு மாறினால்தான் எங்கள் தமிழ் ஆக்கங்களை, தமிழ் ஆவணங்களை இணையத்தில் பாதுக்காக்க முடியுமாம்! பேசிக்கொள்கின்றார்கள்.

ஹே! நான் ரெடி. நீங்கள் ரெடியா? மீண்டும் ஒரு மரதன் ஓட்டத்திற்கு.

இப்போது பரீட்சார்த்தமாக ஒரு தமிழ் யுனிகோட் பக்கம் ஒன்றை உருவாக்கி இணையத்தில் உலாவ விட்டிருக்கின்றேன். பாதுகாப்பிற்காக!

ஆனால் என்னுடைய தமிழ் இணைய ஏழு வருட அனுபவத்தில் பார்க்கின்றேன்.
இன்று அனேக இலங்கைத்தமிழரின் இணையப் பக்கங்கள் ‘பாமினி’ எழுத்துருவில்
அழகாக இன்னமும் காட்சி தருகின்றன. எந்த பிழையையும் காண முடியவில்லை.

நினைத்துப் பார்க்கின்றேன்.!! ??

கணனியில் தமிழ்!
ஏழு வருடங்கள்! எத்தனை மாற்றங்கள்!
இருந்தும் ?
நாம் இப்போ எங்கு நிற்கின்றோம்?

கணனியில் தமிழ்!
இன்னும் என்னென்ன சாதிக்க இருக்கின்றன!
அங்கு நாம் செல்வோமா? செல்ல முடியுமென நீங்கள் நினைக்கின்றீர்களா?

இது ஒரு சாதாரண தமிழ் கணனி பயனாளரின் ஆதங்கம் மட்டுமல்ல.
கவலையும் கூட.

பாவம் இந்த தமிழ் எழுத்துக்குறியீட்டு மென்பொருள் கணனி வல்லுனர்கள்.
அவர்கள்தான் என்ன செய்ய முடியும்?
ஒரு கை ஓசை எழுப்புமா?

இந்த அஞ்சல் எவரையும் தனிப்பட்ட முறையிலோ குழு சார்ந்த முறையிலோ
குறை கூற எழுதப்பட்டது அல்ல. இது ஒரு சாதாரண தமிழ் கணனி பயனாளர்
ஒருவரின் உள்ளத்து உணர்ச்சிகள். இது ஏற்பட்டதன் காரணம். அண்மைக்காலத்து
மின்னஞ்சல்கள். எழுத்துக்குறியீடு பற்றியது.

இந்த தாக்கம் இன்னும் எத்தனை தமிழ் ஆவலர்களை வேதனைப்படுத்தியிருக்கும்
என்பது அவரவர்களுக்குத்தான் தெரியும்.

கணனியில் தமிழ். கடவுள்தான் காப்பாற்ற வேண்டும்.

நட்புடன்,
மகேன்.
கனடாவிலிருந்து..
நவம்பர் 24, 2002

(தமிழ் உலக மின்னஞ்சல் குழுமத்திற்கு அனுப்பப்பட்ட ஒரு அஞ்சல் – நவம்பர் 24, 2002)

நன்றி : எழில்நிலா