Showing posts with label அறிவுரை. Show all posts
Showing posts with label அறிவுரை. Show all posts

Mar 27, 2009

திராட்சை சாப்பிடறீங்களா?

ஒரு நாள் பஸ்சுக்கு காத்திருந்தேன். சற்று தள்ளி ஒருவன் தள்ளுவண்டியில் திராட்சை விற்றுக்கொண்டிருந்தான். பஸ் ஸ்டாப்பில் அவ்வளவாக கூட்டம் இல்லை. அப்பொழுது தான் ஒரு பஸ் போயிருக்க வேண்டும்.

தள்ளுவண்டிக்காரன் என்னிடம் பேச்சுக்கொடுத்தான்.

“என்ன சார் பஸ்சுக்கு நிக்கிறீங்களா?”
(இது என்ன கேள்வி? பின்ன பிளேனுக்கா நிக்கறேன்?)

“ஆமாப்பா, எப்ப வரும்னு தெரியல.”

“எனக்கும் தெரியாது சார், நான் இன்னைக்கு இங்க நிப்பேன், நாளைக்கு ரெயிலடியில இருப்பேன். அடுத்த நாள் இன்னொரு எடம்“

“என்ன வெயில் சார். ரெண்டு நாளா நல்ல மழை இன்னிக்கு எப்பிடி வெயில் அடிக்குது”. சொல்லிக்கொண்டே மூக்கை சிந்தி சற்று தள்ளி உதறினான்.

“உங்களுக்கு ஒரு அரைக்கிலோ போடவா? அருமையான திராட்சை சார். கொட்டையில்லாதது. சீசன் முடியப்போகுது மகாராஷ்டிராவில இருந்து வரணும். டிசம்பர்ல ஆரம்பிச்சு ஏப்ரல் வரைக்கும் இருக்கும்”.

“வேண்டாம்பா நேத்துத் தான் அரை டஜன் வாழைப்பழம் வாங்கினேன் இன்னும் அப்பிடியே இருக்கு. அப்புறம் பார்க்கலாம்”

(மூக்கை சிந்தி.. அந்தப்பக்கம் திரும்பி உதறிவிட்டு கால் சட்டையில் துடைத்துக் கொண்டான்)

“என்னப்பா ஜலதோசமா?”

“ஆமா சார் தடுமன் புடிச்சுகிச்சு, ரெண்டு நாலா மழைல்ல”

“ஏம்பா கர்சீப் எதுவும் கொண்டு வரலையா?”

“துண்டா சார்? என்னா சார் செய்றது அவசரத்தில வந்திட்டேன்.”

“ஏம்பா இந்த பழத்தில் தண்ணியெல்லாம் தெளித்து கழுவலாமே”

“அட நீங்க ஒண்ணு தண்ணி ஊத்துனா அப்பிடியே அழுகிடும்”

ர்ர்ர் ர்ர்ர் ர்ர்ர் என்று சத்தத்துடன் சளியை உதறினான்
(இந்த முறை கால் சட்டையில் துடைத்துக்கொள்ளவில்லை போல இருக்கே?)



“ஒரு நாளைக்கு எவ்வளவு மெட்ராசுக்கு வருதுன்னு நினனக்கிறீங்க. சுமார் 100 டன். விலை இறங்கிப்போச்சு சார் வித்து தள்ளியாகணும்.
ஒரு பெட்டிக்கு அஞ்சு கிலோ ரூ 180க்கு எடுக்கிறோம்.

மீண்டும் ர்ர்ர்…..ர்ர்ர்ர்ர்ர்ர்…..ர்ர்ர்ர்ர்.


“திராட்சை….திராட்சை அரைக்கிலோ இரூபது ரூபா” கத்தினான்

அப்பொழுது இன்னொருவர் பஸ் ஸ்டாப்பிற்கு வந்தார்.
“ஒரு அரைக்கிலோ போடுப்பா” என்றார்.

பழங்களை எடுத்துப் போட்டுக் கொண்டிருந்தான்

தராசுக்குள் கவனித்தேன் ஒரு மாதிரி வெளிர் பச்சையாக தெரிந்தது. சூரிய ஒளி பட்டு பளபளத்துக் கொண்டிருந்தது.
(திராட்சையும் தான்)

Mar 5, 2009

மஞ்சுவிரட்டு / ஜல்லிக்கட்டு காளையும் நானும்

ஊர் திருவிழா மற்றும் பொங்கல் சமயங்களில் ஜல்லிக்கட்டு நடப்பது வழக்கம்.

எவ்வளவோ முயற்சித்தும் பலமுறை கலந்து கொள்ள முடியாமல் போய்விட்டது.

ஆண்டுதோறும் நடக்கும். இந்த ஆண்டு நடத்த மாவட்ட நிர்வாகம் அனுமதி மறுத்ததால் கிராமத்தினர் சார்பில் மதுரை ஐகோர்ட் கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டது. சுப்ரீம் கோர்ட் வழிகாட்டுதல் படி நடத்த கோர்ட் உத்தரவிட்டது.

இந்த முறை ஊரில் இருந்தேன். தோதாக லீவு வேறு.

இந்த முறை எப்படியும் ஒரு கை பார்த்துவிடுவது என்று முடிவு செய்தேன்.

ஆரம்பிப்பதற்கு வெகு முன்னரே சென்றுவிட்டேன்.

நூற்றுக்கும் மேற்பட்ட காளைகள் தொழுவத்தில் அடைக்கப்பட்டிருந்தன.
ஏகப்பட்ட போலிஸ் பாதுகாப்பு வேறு.

ஆரம்பித்து விட்டது. காளைகள் ஒவ்வொன்றாக வர ஆரம்பித்தன.

எதிர்பட்ட அனைவரையும் முட்டிமோதி தள்ளிக்கொண்டு சென்றன.

கூரான கொம்பு, உருண்டு திரண்ட திமில். பார்பதற்கே பயங்கரமாக இருந்தன.
வர்ணனையாளர்கள் பீறிடும் இரத்தத்தையும் வர்ணித்து கொண்டிருந்தார்க்ள்.
தூக்கி வீசப்பட்ட இளைஞர்களை டாக்டர்கள் குழு அவசர சிகிச்சை செய்து கொண்டிருந்தார்கள்.

சிலருக்கு கை காலில் காயம். சிலருக்கு குடல் சரிந்து தூக்கிக்கொண்டு காப்பற்ற ஓடிக்கொண்டிருந்தார்கள்.

காளைகளின் கொம்புகளில் இரத்தம்.

வெளிநாட்டுப் பயணிகளும் ஆர்வமுடன் பார்த்துக்கொண்டிருந்தார்கள். ஒரு வெளிநாட்டுப் பெண்மணி ஊரில் இதைக் காட்ட வேண்டும் என்று ஆர்வத்துடன் வீடியோ எடுத்துக்கொண்டிருந்தார்.

ஒரு காளை என்னை நோக்கி வந்து கொண்டிருந்தது. நல்ல கூரிய கொம்பு. சிலுப்பிகொண்டும் உறுமிக்கொண்டும் இருந்தது. அதன் மேல் இரத்தகலராக இருந்தது.

குங்குமத்தை கொட்டியிருக்கிறார்களா? அல்லது யாரையும் முட்டிய இரத்தக்கரையா?

எனக்கு அருகில் வந்தது. என்ன ஒரு பத்து பனிரெண்டு அடி தூரம் இருக்குமா?

ரொம்ப நேரம் சுற்றி வந்தது. இன்னும் நெருங்கட்டும் பார்க்கலாம்.

கொம்பால் தரையை குத்திக் கிழித்தது. புழுதி பறந்தது. காலால் மண்ணை கீறியது. உறுமியது.

"யார் கிட்ட விளையாடுறே. வா ஒரு வழி பண்ணிடறேன்".

இன்னும் கொஞ்சம் அருகில் வந்தது. இப்ப திமிலை அமுக்கிப் பிடித்து ஒரேயடியா மோதி
மடக்கி விடலாம் என்று நினைத்தேன். அப்போ தான் பின்னாலேருந்து ஒருத்தன் துரத்திக்கொண்டு வந்தான். அடச்சே! நேராக ஒடிவிட்டது.

"அடேடே.. அப்புறம்".

அப்புறமென்ன.. எவ்வளவு நேரந்தான் தென்னை மரத்து மேலேயே இருக்கிறது?.
இறங்கி வீட்டுக்கு போயிட்டேன்.

Mar 4, 2009

வேர்கடலையும், செருப்பும், புத்தகமும் மற்றும் மேட்டர் சிடியும்

(ஹி ஹி! பின்நவினத்துவம், நான்லினியர், கவிதைகளும் இன்றைய இலக்கியமும்! அப்டீன்னெல்லாம் எழுதலாம்னா, ஒண்ணும் தோணமாட்டேங்குது.அதுனால..)

வேர்கடலையும், செருப்பும், புத்தகமும் மற்றும் மேட்டர் சிடியும்

ஒரு நாள் நண்பர் ஒருவருடன் சினிமாவிற்கு போக பஸ்சுக்காக காத்துக்கொண்டிருந்தேன். பஸ் வரக்காணோம். சற்று நேரம் பேசிக்கொண்டிருந்தோம்.

அருகே ஒரு தள்ளுவண்டியில் ஒருவன் வேர்க்கடலை விற்றுக்கொண்டிருந்தான். வறுக்கும் வாசனை வந்து கொண்டிருந்தது. நண்பர் வேர்கடலை வாங்கலாம் என்றார். அவன் இரண்டு பேருக்கும் கொடுத்துவிட்டு "3 ரூவா குடு சார்" என்றான்.

நண்பர் பணத்தை கொடுத்துவிட்டு என்னிடம் மெதுவாக சொன்னார். “பாருங்க சார் அநியாயம் ஐம்பது காசு பெறும். கூசாமல் 1.50 சொல்கிறான்" என்றார்.

“சார் அவன் 100 பேருக்கு விற்று தான் ரூ 100 பார்க்க முடியும். நீங்களே சொல்லுங்க, அவனுக்கும் குடும்பம் குட்டி இருக்கும். என்ன பண்ணுவான்” என்றேன்.


இப்படி பேசிக்கொண்டே நடந்து கொண்டிருந்த போது அவர் செருப்பு அறுந்து விட்டது.

பஸ் ஸ்டாப் அருகே இருந்த செருப்பு தைப்பவரிடம் கொடுத்து எவ்வளவு என்று கேட்டார்.

“பன்னெண்டு ரூவா ஆகும் சார் வேணா பத்து ரூவா குடு.”

நண்பர் 6 ல் ஆரம்பித்து 8 ரூபாயில் பேரம் முடித்தார்.

ஒருவழியாக தைத்து முடித்து வாங்கிக்கொண்டு கிளம்பினோம்.

நண்பர் சொன்னார். “பத்து நிமிடம் ஆகியிருக்குமா? சின்ன வேலை இதற்குப் போய் பன்னெண்டு ரூவா கேட்டான்”

“விடுங்க சார் நாள்பூரா காத்திருக்க வேண்டும். ஒரு பத்துப் பேராவது வந்தால் தான் அவனுக்கு இன்றைய பொழுது ஓடும்.” என்றேன்.

இப்பொழுது பஸ் வந்து விட்டது.

ஏறி இறங்கி தியேட்டர் நோக்கி நடந்தோம்.

பிளாட்பார்மில் ஒரு புத்தகக் கடையைப் பார்த்தேன். பலவகையான புத்தகங்கள்! நாவல்கள், கதைகள், கட்டுரைகள் சரோஜாதேவி புக்ஸ் கூட இருந்தது.

சில பாக்கெட் நாவல்கள் எடுத்து விலை கேட்டேன் மொத்தம் 70 ரூவா குடுங்க என்றான். பேரம் பேசி 30 ரூபாய் குடுத்துவிட்டு புறப்பட்டேன்.

நண்பர் ஏதோ கேட்க வாயெடுத்து பிறகு ஒன்றும் சொல்லாமல் வந்தார்.

அடுத்து ஒரு சிடி கடையைப் பார்த்தேன். பிளாட்பார்மில் கடை விரித்திருந்தான்.
விசிடி, எம்.பி.3, பழைய பாடல்கள், புதிய பாடல்கள், காமெடி, ஒலியும் ஒளியும், படங்கள். இன்னும் நிறைய இருந்தது.

“எவ்வளவுப்பா?” “சார் 35 ரூவா உங்களுக்கு 30 ரூவாக்கி தர்றேன்.”

“25க்கு தருவியா?”

அவன் முனகிக்கொண்டே, “சரி சரி எடு சார்” என்று சொல்லிவிட்டு அடுத்த வியாபாரத்தை கவனிக்க ஆரம்பித்தான்

சில எம்.பி.3 சிடி செலக்ட் பண்ண்டிக்கொண்டிருக்கும் போது நண்பர் பொறுக்க முடியாமல் கேட்டார் “உங்களுக்கே தெரியும் சொல்லுங்கள் ஒரு சிடி அடக்கவிலை எவ்வளவு? 25க்கு கேட்கிறீர்களே. அநியாயம்! என்னை மட்டும் சொல்றீங்க.?

Blank CD எவ்வளவு? “8 அல்லது 10 ரூவா”
CD Recording ? 6 அல்லது 8 ரூவா”
Label printing, Plastic cover?

“என்ன...மொத்தம் 22 ரூவா இருக்கலாம். அப்படியும் லாபம் தானே?” என்றேன்.

நண்பர் “1 சிடிக்கு 3 ரூவாயா? இவனுக்கும் குடும்பம் இருக்கலாம்” எப்ப எவ்வளவு சிடி வித்து சம்பாதிப்பது, குடும்பத்தை நடத்துவது?” என்றார்.

இப்பொழுது சிடிக்காரன் “எடுத்தாச்சா சார்” என்றான். “ஆச்சுப்பா”

“சார் ‘மேற்படி சிடி’ கேக்குறார்” என்றேன்.
“என்ன?”

“சார் ‘மேட்டர் சிடி’ கேக்குறார்பா” என்றேன்” நண்பர் கேட்கவேயில்லையே என்று விழித்தார்.

சிடிக்காரன் அவரிடம் திரும்பி “எல்லாம் இருக்கு சார், 80 ரூவா, வேணா சாருக்காக 70 ரூவாக்கி தரலாம்.”

“என்னிடம் குனிந்து என்ன சொல்றான்” என்றார்

“மேட்டர் சிடி, அதாவது ஷகிலா, மரியா, ரேஷ்மா, பிரதிபா, சஜினி, மலையாளப் படம், அஞ்சரைக்குள்ள வண்டி, மழு, பிடிக்கிட்டாப் புள்ளி, அவளோட ராவுகள், அடல்ஸ் ஒன்லி, புளூ பிலிம், ‘ஒரு மாதிரி’ சிடி எல்லாம் இருக்காம்!”

நண்பர் என்னை முறைத்தார்.

“சார் 60க்கு எடு சார் நாலஞ்சு தான் பாக்கி, இன்னிக்கு 30, 35 தான் கொண்டுவந்தேன்.”

கடைக்காரனிடம் எம்.பி.3 க்கு செட்டில் செய்து,
“அவர் மிட்நைட் மசாலா பார்த்துக்கிறாராம். இன்னொரு நாள் பாக்கலாம்.” என்று விட்டு நகர்ந்தேன்.

நண்பரிடம் சொன்னேன், “கேட்டீர்களா ! சாயங்காலம் ஆரம்பித்து கிட்டத்தட்ட 30 மேட்டர் சிடி வித்திருக்கான் 30 x 30 தொள்ளாயிரம் லாபம்!
இவன் நம் வியாபாரத்தை நம்பியில்லை. புரிந்ததா?

என்றாவது ஒரு நாள் அவர் மேற்படி சிடியை 45க்கு பேரம் பேசிக்கொண்டிருக்கலாம்! கருப்பு பேண்ட், ரோஸ் கலர் முழுக்கை சட்டை. (இன் பண்ணாமல்) பார்த்தால் விசாரித்ததாக சொல்லுங்கள்! பார்த்து ரொம்ப நாளாகிறது !.

Mar 2, 2009

கொஞ்சம் வெயிட் பண்ணி இருக்கலாம் !

முதன் முதலாக கம்பியூட்டர் ஒன்று வாங்கலாம் என்று நினத்தேன். (சமீபத்தில் கிபி 2000)

பெண்டியம் 3, (assembled)

500 Mhz, 10gb harddisk, CD writer, 15 inch monitor, speaker (windows 98 pirated?)
Dictionary CD Free, Typing Tutor CD Free

விலை ரூ 44,750/-

தெரிந்தவர் மூலமாக பேரம் பேசியதில் 42,200 க்கு படிந்து வாங்கியாகி விட்டது.


அதன் பிறகு ஒரு 10, 15 நாள் ஆகியிருக்கும்.
என் வீட்டம்மா செய்தித்தாளை கொண்டு வந்து காட்டினார்.

அதில் ஒரு விளம்பரம் !

Discount Sale !

Brand New பெண்டியம் 3 Computer,
800 Mhz, 20gb HDD, CD writer, 17 inch monitor, speaker, modem (OS windows 98)
1 year Guarantee !
Encyclopedia CD free, Games Cd free !!

விலை ரூ 39,500/-

விளம்பரத்தைக் காட்டிவிட்டு வீட்டம்மா ஒரே சத்தம்

“அவசரப்பட்டுவிட்டீர்கள், நஷ்டம்”
(நான் : அப்படித்தான் இருக்கும் என்ன பண்ண முடியும்!)



கொஞ்ச நாள் கழித்து ஒரு “Music system” வாங்க ஐடியா பண்ணினேன்.

Exchange offer !

“பழைய டேப் ரெக்கார்டரைக் கொடுத்துவிட்டு CD system !

ஆடியோ சிடி,
டேப் ரெக்கார்டர்
FM / AM Radio
With Remote control !
Original price Rs. 11,250/- exchange price Rs. 8250/- any old tape recorder in working condition accepted.”

ஆகா !! Music System with Remote control.. படுத்த படியே இயக்கலாம். உடனடியாக வீட்டில் இருந்த ஒரு பழைய (?) டேப் ரெக்கார்டரை கொடுத்துவிட்டு புது Music System வீட்டுக்கு கொண்டுவந்தேன்.

நன்றாகத்தான் ஒடியது.

ஒரு மாதத்திற்கு பிறகு வீட்டம்மா பேப்பரில் ஒரு விளம்பரம் காட்டினார்.

VCD system! Without any exchange !!

ஆடியோ சிடி
வீடியோ சிடி
டபுள் கேசட் ரெக்கார்டர்
FM / AM Radio
With remote control
Price Rs. 9,500/-

இந்த முறை வீட்டம்மாவிடம் இருந்து அர்ச்சனை

“உங்களுக்கு யோசனையே கிடையாது, பொறுமையே இல்லை”
(நான் : அப்படித்தான் இருக்கும் என்ன பண்ண முடியும்!)

இதுபோல் அடிக்கடி எதையாவது டக்கென்று முடிவு செய்த பிறகு
அதை விட attractive ஆக ஏதாவது கண்ணில் படுவதும் வழக்கமாக இருந்தது.

கொஞ்ச நாள் முன்பு கூட கலர் டீவி வாங்கிய பிறகு அதிக discount ல் ஒரு சூப்பர் மாடல் டீவிக்கு விளம்பரம்! வீட்டம்மா காட்டினார். சுமார் 4000 ரூ நஷ்டம்.

இந்த முறையும் வீட்டம்மா விடமிருந்து பலத்த சத்தம்.

“உங்களுக்கு எல்லாத்துக்கும் அவசரம், கொஞ்சம் வெயிட் பண்ணியிருக்கலாம்”
(நான் : அப்படித்தான் இருக்கும் என்ன பண்ண முடியும்!)

இப்படி இருக்கும் போது சமீபத்தில் ஒரு விளம்பரம் பார்த்தேன்!

“மணமகன் தேவை !
அழகான, நல்ல வசதி படைத்த, பெரிய கம்பெனியில் வேலை செய்யும் பெண். “

கொஞ்சம் வெயிட் பண்ணியிருக்கலாமோ !


ஆனாலும் அந்த விளம்பரத்தை என் வீட்டம்மாவிடம் காட்டவில்லை!
(நான் : அப்படித்தான் இருக்கும் என்ன பண்ண முடியும்!)