Showing posts with label மருத்துவம். Show all posts
Showing posts with label மருத்துவம். Show all posts

Apr 2, 2010

தூக்கமின்மை ஏன்? விரட்டுவது எப்படி?

நல்ல சாப்பாடு, நண்பர்களுடன் அரட்டை, குழந்தைகளுடன் விளையாட்டு, இப்படி ஒரு திட்டமிட்ட வாழ்க்கை இருந்தும் இரவில் தூக்கம் வரவில்லை என்றால் என்ன ஆகும்? நினைத்துப் பாருங்கள். வாழ்க்கை நரகம் தான்.

உடலில் நோய்கள் இருந்து தூக்கம் இல்லை என்றால் சமாளித்து விடலாம். நோய்களுக்காக மாத்திரைகள் எடுத்துக் கொள்ளும் போது தூக்கம் வராது. இது ஒரு அசாதாரண சூழ்நிலை. மாத்திரைகள் எடுத்துக் கொள்வதை நிறுத்திவிட்டால், தூக்கம் நன்றாக வரும். இப்படி எந்தக் காரணமும் இல்லாமல், தூக்கம் வரவில்லை என்றால், அதற்கான காரணத்தைக் கண்டுபிடிப்பது அவசியம். தூக்கம் வராததற்கு பத்து காரணங்கள் உண்டு என்று வேடிக்கையாகச் சொல்வார்கள். அவற்றில் எந்த அளவு உண்மை இருக்கிறது.

1. தினமும் எட்டு மணி நேரம் தூக்கம் அவசியம் :ஒரு மனிதனுக்கு தினமும் எத்தனை கலோரிச் சத்து உணவு தேவைப்படும் என்பதற்கு ஒப்பான கருத்து இது. இதற்குச் சரியாகப் பதில் சொல்வது கடினம். அதுபோல்தான் தூக்கமும். தூக்கம் ஒருவருக்கு ஒருவர் மாறுபடும். ஒருநாளில் எட்டு அல்லது குறைந்தபட்சம் ஆறுமணி நேரத் தூக்கம் அவசியம். இந்த நேரம் குறைந்தால், இதய நோய் அல்லது கான்சர் வர வாய்ப்பிருப்பதாகச் சொல்கிறது அமெரிக்க ஆராய்ச்சி. நீண்ட நேரம் தூங்குபவர்களுக்கு இந்த ‘ரிஸ்க்’ அதிகம்.

தூக்கத்தால் அவதிப்படுபவர்கள் ஒரு வாரம் வரை தூங்கும் நேரத்தை ‘டயரி’யில் குறிப்பெடுத்து வைத்துக் கொள்ளலாம். அதன்படி எழுந்திருக்கும் _ தூங்கும் நேரத்துக்கும் இடையில் இருக்கும் இடைவெளியை நோட் பண்ணுவது அவசியம். தூக்க ஊக்கிகள் பயன்படுத்தாமல் தூக்கம் வருகிறதா என்பதை உறுதி செய்து கொள்வதும் அவசியம்.

2. பிற்பகல் விழாவில் போர் அடிக்கும் பேச்சைக் கேட்டவுடன் தூக்கம்.இது இயல்பாக வருவதுதான். ஆனால் ஒரு சிலருக்குத் தூக்கம் வராது. இமைகள் மூடியிருப்பது போல் தோன்றும். ஆனால், தூக்கம் கண்களைத் தழுவாது. தினமும் ஏழு மணி நேரம் மட்டுமே தூங்கும் பழக்கம் இருந்தாலும், மீதியிருக்கும் ஒருமணி நேரத்தை உடல் ஈடு செய்ய விரும்பும். சிலர் அதனை ஈடு செய்யும் விதமாகப் பகலில் குட்டித் தூக்கம் போடுவார்கள். இருப்பினும் நாள்பட்ட தூக்கமின்மையால் உயர் ரத்த அழுத்தம் ஏற்பட வாய்ப்பு உண்டு. வயதானவர்களாக இருந்தால், டயாபடீஸ் உண்டாகும் வாய்ப்பும் அதிகம்.

3. தூக்கமின்மை இருந்தால், சீக்கிரம் படுக்கச் செல்ல வேண்டும்.
பொதுவாக தூக்கமின்மைக்கு நிறைய காரணங்கள். தூக்கம் வரவில்லையே என்பதற்காகப் படுக்கை அறைக்குச் செல்லவே சிலர் விரும்புவதில்லை. நமக்குத்தான் தூக்கம் வருவதில்லையே என்ற எரிச்சல். இது தவறு. மாறாக தூக்கமின்மைக்கான காரணம் என்ன என்பதைக் கண்டறிந்து, அதை நிவர்த்தி செய்ய வேண்டும்.

மது, காபி, மனஅழுத்தம், மனச்சோர்வு டென்ஷன்... உள்ளிட்டவையும் தூக்கமின்மைக்குப் பொதுவான காரணங்கள்.

என்ன செய்யலாம்?வழக்கத்தை விட, ஒரு மணிநேரம் ‘லேட்’டாகப் படுக்கச் செல்லலாம். தூக்கம் வருவதற்கு உரிய சில எளிய பயிற்சிகள் மேற்கொள்ளலாம். உதாரணமாக எண்களை மனதிற்குள் சொல்வது, எளிதான மூச்சுப் பயிற்சியில் ஈடுபடுவது...
சுவாரஸ்யமில்லாத புத்தகங்கள் படிப்பது..,

படுக்கச் செல்லுமுன் வெதுவெதுப்பான தண்ணீரில் குளிக்கலாம். இதன்மூலம் தசைகள் இலகுவடையும். உடல்சூடு குறையும்.

தொடர்ந்து தூக்கமின்மை இருந்தால், டாக்டர் அட்வைஸ்படி மாத்திரைகள் எடுத்துக் கொள்ளலாம்.

குட்டித் தூக்கம் : தூக்கமின்மை இருப்பவர்களுக்கு அவ்வப்போது ‘குட்டித் தூக்கம்’ வரும். இதனால் ஓரளவு சமாதானம் அடையலாம். இரவு ‘ஷிஃப்’டில் வேலை செய்பவர்களுக்கு, தூங்குவதற்கு வாய்ப்பில்லை. அதனால் குட்டித் தூக்கம் போடுவதில் தவறில்லை. அதற்காக, பலமணி நேரம் ‘குட்டித் தூக்கம் போடாமல் இருப்பது நல்லது.

தூக்கமின்மை இருந்தும், பணிகள் பாதிப்பதில்லை :இரவில் இரண்டு மணி நேரத் தூக்கம் பாதித்தால், மறுநாள் உடலில் அசதி ஏற்படும். சுறுசுறுப்பாக இயங்க முடியாது. பெரிய இயந்திரங்களை இயக்குபவர்களாக இருந்தால், முடியாமல் போகும். டூ வீலர் அல்லது கார்களை ஓட்ட முடியாது. அதனால் ஆபீஸ் போவதற்கு நண்பர்களின் உதவியைக் கேட்கலாம்.

தொடர்ந்து ஒருவாரம் வரை இப்படியே இருந்தால், உடல் சூடு அதிகரிக்கும். அதைத் தவிர்ப்பது முக்கியம்.

வாரத்தின் இறுதி நாட்களில் தான் தூக்கம் வருகிறது.
சிலர் கடுமையான வேலைகளுக்கு இடையில் அன்றாடம் ஒரு குட்டித் தூக்கம் மட்டும் போடுவது உண்டு. தூக்கமின்மை பாதிப்பு இருப்பவர்கள் தவிர, மற்றவர்களுக்கு இந்த ‘பிராக்டீஸ்’ மிகவும் மோசமான பின்விளைவுகளை ஏற்படுத்தும்.

எத்தனை வேலைப்பளு இருந்தாலும் முடிந்தவரை தினமும் இரவில் தூங்குவது அவசியம். வேறு வழியில்லை என்றால், குட்டித் தூக்கம் போட்டாவது நிலைமையைச் சமாளிப்பது முக்கியம்.

படுக்கப் போகும் முன்பு உடற்பயிற்சி :உடற்பயிற்சி காலையில் செய்யலாம். படுக்கப் போகும் முன்பு பெரும்பாலோர் உடற்பயிற்சி செய்வதில்லை. ஒரு சிலர் மட்டுமே இந்த ‘பிராக்டீஸ்’ செய்வதுண்டு. இருப்பினும், தூக்கத்துக்கும், ‘பெட் டைம்’, உடற்பயிற்சிக்கும் சம்பந்தமில்லை. தேவையேற்பட்டால், இரவுச் சாப்பாட்டுக்கு முன்பு எளிய உடற்பயிற்சி செய்யலாம். இருப்பினும் முடிந்தவரை காலையில் நேரம் ஒதுக்கி உடற்பயிற்சி செய்வதுதான் நல்லது.

தூக்கம் வருவதற்கான மாத்திரைகள் எடுப்பது :தூக்கமின்மை நிரந்தர நோயாக மாறுவதற்கு முன்பு மாத்திரைகள் எடுப்பது நல்லது. தவறில்லை. ஆனால், டாக்டர்கள் அட்வைஸ் அவசியம். ஒருசில மாத்திரைகள் வீரியம் மிகுந்ததாக இருக்கலாம். இதன் காரணமாக பக்க விளைவுகள் (வாந்தி, தலைவலி, சோர்வு) ஏற்படும். அதனால் கவனம் தேவை.

தூக்க மாத்திரைகளுக்கு அடிமையாதல் :
இது ஆபத்து.

இரவில் லேட்டாகத் தூங்கி அதிகாலையில் எழுவது :
நேரமில்லை. நான்கு மணிநேரம் மட்டுமே தூங்க முடியும் என்ற நிலை இருந்தால், இரவில் லேட்டாக (இரண்டு மணி) தூங்கி, அதிகாலை ஆறு மணிக்கு எழலாம். இரண்டு மணி வரை தூக்கம் வருவதற்குரிய வழிகளில் இறங்கலாம். (போரடிக்கும் புத்தகம் படிப்பது, பாடல்கள் கேட்பது இப்படி...)

தூக்கமின்மை இருப்பவர்கள் டாக்டரிடம் உங்களுக்கு இருக்கும் பாதிப்புகளை ஒளிவு மறைவின்றிச் சொல்லிவிட வேண்டும். குறிப்பாக,

ரெஸ்ட்லெஸ் லெக்ஸ் சிண்ட்ரோம் :தூக்கமில்லாமல் இருந்தால், காலை ஆட்டிக் கொண்டே இருப்பார்கள். கால்களில் நமைச்சல் இருக்கும். ரத்தத்தில் இரும்புச் சத்தின் அளவை டெஸ்ட் செய்வது முக்கியம்.

மூச்சு விடுவதில் சிரமம் :தூங்கும் போது மூச்சுவிட சிரமப்படுவார்கள். குறட்டைச் சத்தம் அதிகம் கேட்கும். உடல் எடை அதிகமிருப்பவர்களுக்கு இந்த ‘ரிஸ்க்’ அதிகம்.

மனச்சோர்வு :இரவில் தூங்காமல் இருந்தால் மறுநாள் உடல், மன சோர்வு ஏற்படும்.

தைராய்டு சுரப்பதில் பிரச்னை :இந்த அறிகுறி தெரிந்தால் உடனே டாக்டரிடம் செல்வது அவசியம். தைராய்டு ஸ்டுமுஹேங் ஹார்மோன் அளவு அதிகமிருந்தாலும் தூக்கம் வராது.

Aug 7, 2009

பன்றி காய்ச்சல் நோய் - தடுக்க என்ன செய்யவேண்டும்

பன்றி காய்ச்சல் நோய் (ஸ்வைன் ப்ளூ) என்பது என்ன?

பன்றி காய்ச்சல் நோய் (ஸ்வைன் ப்ளூ) என்பது 'ஏ' இன்ப்ளூயென்ஸா வகைக் வைரஸ் கிருமியினால் பன்றிகளுக்கு வரக்கூடிய சுவாச நோய் ஆகும்.மனிதனுக்கு ஸ்வைன் ப்ளூ பொதுவாக வராது என்றாலும் இந்நோய் தாக்குவதற்கான வாய்ப்புகள் அதிகம். ஸ்வைன் ப்ளூ வைரஸ்கள் ஒரு மனிதனிடம் இருந்துமற்றொருவருக்கு பரவக்கூடியவை. ஆனால் கடந்த காலங்களில் இத்தகைய ஸ்வைன் ப்ளூ வைரஸின் பரவல் குறிப்பிட்ட அளவு வரையே. அதிக பட்சம்மூன்று மனிதர்களைத் தாக்கியிருந்தது.
2009-ம் ஆண்டின் மார்ச் மாத இறுதி மற்றும் ஏப்ரல் மாத ஆரம்ப கால கட்டத்தில், தெற்கு கலிபோர்னியா மற்றும் டெக்ஸாஸ்க்கு அருகில் உள்ள சேன்ஆன்டோனியோ ஆகிய இடங்களில் ‘A’ ஸ்வைன் இன்ப்ளூயன்ஸா (H1N1) வைரஸ்கள் மனிதர்களுக்கு தொற்றி தாக்கத்தை அளிப்பது முதன்முதலில்அறியப்பட்டது.அமெரிக்காவின் இதர பகுதிகளிலும் இந்த நோய் மனிதர்களுக்குப் பரவுவது கண்டறியப்பட்டது. பின்னர் உலக அளவிலும் இதுகண்டறியப்பட்டது.



மனிதனிடம் பன்றி காய்ச்சல் உள்ளதைக் காட்டும் அறிகுறிகள் என்ன?

மனிதனுக்கு பொதுவாக வரக்கூடிய ப்ளூ காய்ச்சலுக்குரிய அறிகுறிகளுடன்தான் ஸ்வைன் ப்ளூ நோயும் வரும். வைரஸ் உடலில் பரவியதும் சளி, காய்ச்சல்,தொண்டைவலி, சோர்வு, உடல் வலி, குளிர் போன்றவையும் வரும். சிலருக்கு வாந்தி மற்றும் வயிற்று போக்கும் ஏற்படக்கூடும்.
கடந்த காலங்களில் இந்நோய்வாய்ப்பட்டவர்களிடம் கடுமையான அளவில் உடல்நிலை பாதிப்பும் (நிமோனியா மற்றும் சுவாச உறுப்புகள் செயல் இழப்பு)உயிரிழப்பும் ஏற்பட்டிருக்கின்றன. ப்ளூ காய்ச்சலைப் போலவே, ஏற்கனவே இருக்கும் நோய்களையும் வலிகளையும் இந்நோயும் தீவிரப்படுத்தும்..
இத்தகைய ப்ளூ வைரஸ்கள் தும்மல் மற்றும் இருமல் ஆகிய இரு முக்கிய காரணங்கள் மூலம் ஒருவரிடம் இருந்து மற்றொருவருக்கு வேகமாக பரவக்கூடியவை.சில சமயங்களில் ப்ளூ வைரஸ்கள் தொற்றியுள்ள பொருள்களைத் தொட்டுவிட்டு பிறகு மூக்கு அல்லது வாய் பகுதிகளைத் தொட்டாலும் இந்நோய்தாக்கக்கூடும்.

நோய் தாக்கியவரிடம் இருந்து மற்றொருவருக்கு இது எப்படி பரவும்?

இவ்வியாதியால் பாதிக்கப்பட்ட ஒருவரிடம் இருந்து இந்நோய்க்கான அறிகுறிகள் தெரிவதற்கு முந்தைய ஒரு நாள் முதல் நோய்வாய்ப்பட்ட 7ம் நாளுக்குள்மற்றொருவருக்கு இந்நோய் தொற்றக்கூடும். அதாவது ஒருவருக்கு இந்த ஸ்வைன் நோய் இருப்பது தெரிவதற்கு முன்பாகவும், நோயில் அவதிப்பட்டு கொண்டுஇருக்கும் பொழுதும் இந்நோய் ஒருவரிடம் இருந்து அடுத்தவருக்கு பரவிவிடும்


நோய் எனக்கு தொற்றாமல் இருக்க என்ன செய்ய வேண்டும்?

முதல் மற்றும் முக்கிய செயல்: உங்களின் கைகளைக் கழுவுங்கள். நல்ல ஆரோக்கியத்துடன் இருக்க முயற்சிக்கவும். நன்றாக தூங்கவும். சுறுசுறுப்பாக இருக்கவும்.மன அழுத்தம் மற்றும் அதிக வேலைப்பளுவை முறையாகக் கையாளுங்கள். அதிக அளவு நீர் ஆகாரங்களை எடுத்துக் கொள்ளுங்கள். ஊட்டச்சத்து உள்ளஉணவை உண்ணுங்கள். ப்ளூ வைரஸ்கள் தொற்றியுள்ள பொருள்களையும் பகுதிகளையும் தொடாதீர்கள். இவ்வியாதி உள்ளவரிடம் நெருங்கிப் பழகுவதைத்தவிர்த்து விடுங்கள்.



ஸ்வைன் நோய் எனக்கு வராமல் இருக்க என்ன செய்ய வேண்டும்?

ஸ்வைன் நோய் வராமல் தடுக்க தற்போது எந்த தடுப்பூசியும் இல்லை. இன்ப்ளூயன்ஸா போன்ற சுவாச நோய்களை உருவாக்கக்கூடிய கிருமிகள் பரவாமல்தடுக்க ஒவ்வொரு நாளும் சில செயல்முறைகளைக் கடைபிடித்தல் அவசியம்.ஸ்வைன் நோய் வராமல் தடுத்து ஆரோக்கிய வாழ்வு வாழ.....
இருமும் பொழுதும் தும்மும் பொழுதும் வாய் & மூக்குப் பகுதிகளை திசுத்தாள் அல்லது கைக்குட்டை வைத்து மூடிக்கொள்ளவும்.
தும்மல் மற்றும் இருமலுக்கு பின் சோப் & தண்ணீர் கொண்டு கைகளை நன்கு கழுவவும்.ஆல்கஹால் (அல்லது வேதிப்பொருட்கள்) கொண்டுதயாரிக்கப்பட்ட பொருட்கள் மூலம் கைகளை சுத்தப்படுத்துதலும் நல்லது.
கண்கள், வாய், மூக்கு பகுதிகளைத் தொடுவதைத் தவிர்க்கவும். கிருமிகள் இதன் மூலம் எளிதில் பரவும்.
இவ்வியாதி உள்ளவரிடம் நெருங்கிப் பழகுவதைத் தவிர்த்து விடுங்கள்

உங்களுக்கு இன்ப்ளூயன்ஸா நோய் இருந்தால், தயவு செய்து வேலை மற்றும் பள்ளிக்கு செல்வதைத் தவிர்த்து வீட்டிலேயே இருக்கவும். பிறருடன் தொடர்புகொள்வதைக் குறைத்துக் கொள்ளவும்.



இருமல் மற்றும் தும்மல் மூலம் இந்த வைரஸ் பரவாமல் இருக்க சிறந்த வழி என்ன?

உங்களுக்கு இந்நோய் இருந்தால், முடிந்த அளவிற்கு பிறருடன் தொடர்பு கொள்வதைக் குறைத்துக் கொள்ளவும் . வேலை மற்றும் பள்ளிக்கு செல்வதைத்தவிர்த்து வீட்டிலேயே இருக்கவும். இருமும் பொழுதும் தும்மும் பொழுதும் வாய் & மூக்குப் பகுதிகளை திசுத்தாள் வைத்து மூடிக்கொள்ளவும்.
இது உங்களைச் சுற்றி உள்ளவருக்கு இந்நோய் தாக்காமல் இருக்க உதவும்.பயன்படுத்திய திசுத்தாளை குப்பைக்கூடையில் போடவும். திசுத்தாள் இல்லைஎன்றால், இருமும் பொழுதும் தும்மும் பொழுதும் கைக்குட்டை அல்லது கைகளை வைத்து மூடிக்கொள்ளவும். பிறகு, கைகளை நன்கு கழுவவும்.ஒவ்வொருமுறையும் இருமல் மற்றும் தும்மலுக்கு பிறகு கைகளைக் கழுவவும்.



நோய் வராமல் தடுக்க கைகளைக் கழுவி சுத்தப்படுத்த சிறந்த முறை என்ன?

அடிக்கடி கை கழுவுதல் கிருமிகளிடம் இருந்து உங்களைக் காக்கும். சோப் & தண்ணீர் அல்லது ஆல்கஹால் (அல்லது வேதிப்பொருட்கள்) கொண்டுதயாரிக்கப்பட்ட பொருட்கள் மூலம் கைகளைக் கழுவவும். சோப் & சுடு தண்ணீர் கொண்டு கழுவும்பொழுது 15 முதல் 20 நொடிகளுக்கு கழுவவும். சோப் &தண்ணீர் இல்லாத பொழுது, ஆல்கஹால் கொண்டு தயாரிக்கப்பட்ட டிஸ்போசபல் கையுறைகள் (ஒரு முறை மட்டும் பயன்படுத்திக்கொண்டு எறிந்து விடவேண்டும்) அல்லது ஜெல் வகை அழுக்கு நீக்கிகளைப் பயன்படுத்தலாம். இவைகள் மருந்து கடைகள் மற்றும் சூப்பர்மார்க்கெட்டுகளில் கிடைக்கும். ஜெல்லைப்பயன்படுத்தினால் ஜெல் முற்றிலும் காய்ந்து கைகள் ஈரமின்றி இருக்கும்படி கைகளை நன்றாக உரசித்தேய்க்கவும்.ஜெல்லைப் பயன்படுத்திடும் பொழுது தண்ணீர்தேவையே இல்லை. ஜெல்லில் உள்ள மருந்து பொருட்களே கைகளில் உள்ள கிருமிகளைக் கொன்றுவிடும்.




உங்களுக்கு உடல்நிலை சரியில்லாமலும் பின்வரும் அறிகுறிகளில் ஏதேனும் இருப்பதாகவும் உணர்ந்தால், உடனடி மருத்துவ சிகிச்சையைமேற்கொள்ளவும்.

குழந்தைகளாக இருப்பின்....

வேகமாக சுவாசித்தல் (இளைப்பு )அல்லது சுவாசிக்க சிரமப்படுதல்.
தோல்களில் நீல நிறம் கலந்த தோற்றம்.
அதிக நீர் ஆகாரங்களை எடுத்துக் கொள்ளாமல் இருத்தல்
பிறரிடம் கலந்து பேசாமல் பழகாமல் இருத்தல் அல்லது படுத்தபடியே சோர்வாக இருத்தல்.
குழந்தைகளைத் தூக்கும் பொழுதும் கட்டி அணைக்கும் பொழுதும் அசெளகரியத்தையும் எரிச்சலையும் காட்டுவார்கள்.
ப்ளூ வருவதற்கான அறிகுறிகள் அதிகரிக்கும் ஆனால் காய்ச்சல் மற்றும் மோசமான சளி, இருமலுடன் நின்றுவிடும்.
தோலில் சிவப்பு நிற புள்ளிகளுடன் கூடிய காய்ச்சல்

பெரியவர்களுக்கு.........

சுவாசிக்க சிரமப்படுதல் அல்லது மூச்சுத்திணறல்
மார்பு அல்லது வயிறு பகுதிகளில் வலி அல்லது அழுத்தமான உணர்வு
தீடீர் மயக்கம்.
தடுமாற்றம்.
கடுமையான அல்லது தொடர்ந்த வாந்தி.

- மற்ற விபரங்களுக்கு மருத்துவரை அணுகவும்.

Jul 27, 2009

ரொம்ப நேரம் கம்பியூட்டர் பயன்படுத்தினால்!

கம்ப்யூட்டர் துறையில் வேலை பார்ப்பவர்கள் ஒரு நாளைக்கு குறைந்தது எட்டு மணி நேரமாவது உழைக்கவேண்டிய கட்டாயம். இப்படித் தொடர்ச்சியாக பல ஆண்டுகள் பணிபுரிய வேண்டியதால் பல விதமான பிரச்சினைகள் ஏற்படுகின்றன.


இந்தப் பிரச்சினைகளுக்குத் தீர்வு அறுவை சிகிச்சைகளோ, மாத்திரைகளை விழுங்குவதோ அல்ல. சின்னச் சின்னதாக சில உடற்பயிற்சிகள், நம்முடைய உடலை ரிலாக்ஸ் ஆக்கிக் கொள்ளும் சில டெக்னிக்குகள், உட்கார்ந்திருக்கும் முறைகள் இவற்றைத் தெரிந்து வைத்திருந்தாலே போதும், எளிதாக துன்பத்திலிருந்து எளிதாகத் தப்பித்து வந்துவிடலாம்.


முதலில், உங்களுக்கு முன் இருக்கும் கம்ப்யூட்டர் திரை, உங்கள் கண் பார்வையிலிருந்து இரண்டு இஞ்ச் தாழ்வாக இருக்க வேண்டும். உங்கள் கண் பார்வையிலிருந்து கம்ப்யூட்டர் திரை உயரமாக இருக்கும் பட்சத்தில் நீங்கள் உங்கள் தலையைத் தூக்கித்தான் பார்க்க வேண்டும். அது உங்கள் கழுத்துக்கு அநாவசியமான வலியைக் கொடுக்கும். எனவே அந்த விஷயத்தில் ஜாக்கிரதையாக இருங்கள்.


எப்படி இதைச் சரி செய்வது?உங்கள் டேபிளின் உயரத்தைக் குறைத்துக் கொள்ளலாம். அல்லது நீங்கள் உட்கார்ந்திருக்கும் சேரின் உயரத்தை அதிகரிக்கலாம். கம்ப்யூட்டர் முன்பு உட்காரும்போது, ரோலிங் சேரைப் பயன்படுத்தினால் நல்லது. ரோலிங்சேர் மூலம் எளிதாக ஒரு பகுதியிலிருந்து இன்னொரு பகுதிக்கு நகர முடியும் என்பதோடு உயரத்தையும் அதிகப்படுத்தவோ, குறைக்கவோ முடியும். இந்த உயரத்தைச் சரிசெய்கிற விஷயத்தை நம்மில் பலரும் தெரிந்துகொள்வதே இல்லை. கம்ப்யூட்டர் பற்றி படித்தவர்கள் அனைவரும் இந்த உயரம் சரிசெய்கிற விஷயத்தை அவசியம் தெரிந்துகொள்ள வேண்டும்.


கம்ப்யூட்டர் முன்பு உட்காரும்போது, சேரில் சாய்ந்து உட்கார வேண்டும். சேரில் சாயாமல் நேராக உட்காருவதோ, கூன் போட்டு உட்காருவதோ கூடாது. கம்ப்யூட்டரில் உட்கார்ந்து டைப் செய்யும்போது, கைகள் இரண்டும் சேரின் கைப்பிடியின் மீது வசதியாக இருக்கிற மாதிரி பார்த்துக்கொள்ள வேண்டும். சில இடங்களில் கைப்பிடி மிகவும் கீழே இருக்கிறது அல்லது மிகவும் மேலே இருக்கிறது. இதனால் நமக்குத் தீமையே. இதைவிட, கைப்பிடி இல்லாமலிருப்பது நல்லது.


கம்ப்யூட்டரோடு பொருத்தப்பட்டிருக்கும் மௌஸ் பெரும்பாலும் அதற்குப் பக்கத்திலேயே இருக்க வேண்டுமே ஒழிய, டேபிளுக்கு மேலே தனியாக இருக்கக்கூடாது. மௌஸ் பக்கத்தில் இருந்தால்தான் அதை எளிதாக எட்டிப் பிடித்து பயன்படுத்த முடியும். மிக தூரத்தில் இருந்தால் கஷ்டப்பட்டு கையை நீட்டி மௌஸைப் பயன்படுத்த வேண்டியிருக்கும். அதனால் கைகளுக்கும், தோளுக்கும் பாதிப்புதான்.


இதேபோல கம்ப்யூட்டர் டைப் செய்ய உதவும் விசைப்பலகையும் மேல்பாகம் சற்று தூக்கலாகவும், கீழ்பாகம் சற்று இறக்கமாகவும் இருப்பதைவிட, கீழ்பாகம் சற்று தூக்கலாகவும், மேல் பாகம் சற்று இறக்கமாகவும் இருந்தால் நல்லது.


கம்ப்யூட்டரைத் தொடர்ந்து பார்ப்பதனால் கண்களுக்குப் பாதிப்பு ஏற்படும். மிக அதிக அளவில் பாதிப்பு ஏற்பட்டிருந்தால், ஒரு நல்ல கண் மருத்துவரை அணுகுவதுதான் சரியான விஷயம். ஆனால், கம்ப்யூட்டரால் கண்களுக்குப் பிரச்சினைகள் வராமல் தடுக்க சில பயிற்சிகளை மேற்கொள்ளலாம்.


உதாரணமாக, இருபது நிமிடங்களுக்கு கம்ப்யூட்டர் திரையையே நீங்கள் பார்த்துக் கொண்டிருந்தால் ஒரு பத்து வினாடிக்கு திரையிலிருந்து பார்வையை விலக்கி வேறு பக்கத்தில் உள்ள பொருளைப் பார்க்கலாம்.ஏன் இப்படிச் செய்கிறோம் தெரியுமா?சாதாரணமாக, நாம் ஒரு பொருளைப் பார்க்கிறபோதோ, புத்தகம் படிக்கிறபோதோ கண்களை மூடி மூடித் திறக்கிறோம். கண்களுக்குத் தேவையான குளிர்ச்சியும், எண்ணெய்ப்பசையும் கண் சிமிட்டலால் கிடைக்கிறது. ஆனால், கம்ப்யூட்டர் திரைகளை நாம் பார்த்துக்கொண்டே இருக்கும் பட்சத்தில் இந்தக் கண்சிமிட்டல் நடப்பதில்லை. இதனால் கண் பாதிப்படைகிறது. இதைப் போக்கத்தான் வேறு ஒரு திசையில் பத்து வினாடிகள் பார்க்க வேண்டும் என்று சொல்கிறேன்.


தொடர்ந்து ஐம்பது நிமிஷம் நீங்கள் கம்ப்யூட்டரில் பணிபுரிந்தால், ஒரு பத்து நிமிஷத்துக்கு வேறு ஒரு வேலையைச் செய்யலாம். உதாரணமாக, ஃபைல்களைக் கொஞ்சம் அடுக்கி வைக்கலாம். அல்லது போன் பேசலாம். லேசாக ஒரு நடை போட்டுவிட்டு வரலாம்.


இது மாதிரியான சின்னச் சின்ன விஷயங்களை கவனித்தாலே போதும், கம்ப்யூட்டரால் எந்தக் கஷ்டத்தையும் வராமல் பார்த்துக் கொள்ளலாம்.

நன்றி : டாக்டர் மது.

Jul 15, 2009

எந்தக் கடை அரிசி சாப்பிடுகிறீர்கள்!

உடல் எடை அதிகமானவர்களைப் பார்த்து நீ எந்தக்கடை அரிசி சாப்பிடுகிறாய்? என்று கிண்டலாக கேட்பார்கள். அதிகமாகச் சாப்பிடுவதைத்தான் அவ்வாறு கேலி செய்வர்.

நான் கொஞ்சமாகத்தான் சாப்பிடுகிறேன். ஆனால் ரொம்ப வெயிட் போடுதுங்க என்று சொல்லப்படுவதை பரவலாக கேட்க முடிகிறது. உண்மைதான்.

குறைவாக சாப்பிட்டாலும் அதிகமாக சாப்பிட்டாலும் உடம்பு உட்கிரகிக்கும் தன்மையைப் பொறுத்து மாறுபடும். இத்தன்மை நம் உடல்களிலுள்ள நாளமில்லாச் சுரப்பிகளான பிட்யூட்டாரி, தைராய்டு, அட்ரினல், மற்றும் கணையம் போன்றவற்றிலிருந்து சுரக்கப்படும் ஹார்மோன்களால் கட்டுப்படுத்தப்படுகிறது.

ஹார்மொன் சரிவிகிதம் இல்லாமல் சுரந்தால் உடல் பருமனாகவும் செய்யும். இளைத்துப்போகவும் செய்யும்.

நடுத்தர வயதினர் எடைபோடுவது, பெண்களாக இருந்தால் திருமணமாகி குழந்தை பிறந்தபிறகு ஏற்படும் தைராய்டு பிரச்சினை ஒரு காரணமாக இருக்கலாம். உடற்பயிற்சியின்மை எப்போதும் ஓய்வு, நொறுக்குத் தீனி, போன்றவை எடையைக் கூட்டிவிடும்.

ஆண்களுக்கு அதிகமாக சாப்பிடுவதாலும், மது அருந்துவதாலும் எடைகூடும். மனதில் மகிழ்ச்சி அதிகமானால் கூட எடை கூடுவதை நடுத்தர வர்க்கத்தினரிடையே காணலாம். அப்படி என்ன பூரிப்போ, உடம்பு ஒரேயடியாய் பருத்துப் போகுது என்பர்.

முதுமையில் அநேகமாக சில நோய்களின் தன்மையால் எடை கூடிவிடும்.

உடற்பயிற்சியின்மையால் ஊளைச்சதை போட்டு நோய்கள் ஏற்பட வாய்ப்பை உண்டாக்கிடும்.
குண்டானவர்கள் தங்கள் பணிகளை உற்சாகமாய் செய்ய முடியாது. மூட்டு வலி, முதுகு வலி, தசை வலி என அடிக்கடி சிரமப்பட நேரிடும். தங்கள் வயதைவிட முதியவராகவும், கவர்ச்சியமான தோற்றமும் இல்லாமல் இருப்பர். மேலும் ஐம்பது வயதுக்கு மேல் இதய நோய், இரத்தக்கொதிப்பு, நீரழிவு நோய் போன்றவையும் சேர்ந்துகொள்ளும்.

சரி இதற்கு வழிதான் என்ன?

இதோ:

1. சாப்பாட்டை குறைத்து உடற்பயிற்சி ஈடுபடுவதுதான் சிறந்தது.

2. சரியான நேரத்தில் சாப்பிடவும்.

3. எண்ணெப் பதார்த்தங்களை தவிர்க்கவும்.

4. மாமிச உணவு வேண்டவே வேண்டாம்.

5. மதிய உணவில் காய்கறிகள் அதிகமாகச் சேர்க்கவும்.

6. இரவில் பாதி சாப்பாடு அல்லது சிற்றுண்டி பாதி வயிற்றுக்கு மட்டும் சாப்பிட்டு மீதிக்கு தண்ணீர் குடிக்கவும்.

7. பால், தயிர், பச்சை வெங்காயம் (50 கிராம்) சாப்பிடவும்.

8. பசிக்கும்போது நொறுக்குத்தீனி தவிர்த்து தண்ணீர், தக்காளிச்சாறு அல்லது முட்டைகோஸ் சாப்பிடலாம்.

9. மாவுச்சத்து குறைப்பதன் மூலம் படுவேகமாக உடல் எடை குறைய வாய்ப்புண்டு.

10. வயதுக்கேற்ப உடற்பயிற்சியை தேர்ந்தெடுத்து செய்யவும். நடத்தல், ஓடுதல் எதுவாக இருந்தாலும் சிறந்தது.

11. மூட்டு வலி இருந்தால் சைக்கிள் ஓட்டுதல், நீச்சல் போன்றவை உகந்தவை.

12. சோம்பேறித்தனமாக வீட்டில் ஓயாது ஓய்வெடுக்காமல் ஏதாவது ஒரு வேலையில் நம்மை ஈடுபடுத்திக் கொண்டால் சக்தி தீர்ந்து உடல் பருமனாவதைத் தடுத்துவிடும்.

நன்றி : ஆர்.கே.தெரசா

அவசர உலகில் அரங்கேறும் அநியாயங்கள்

வருவாயை அதிகரிக்கும் நோக்கோடு ஓடி ஓடி உழைக்கிறோமே. நமது வங்கிக் கணக்கில் பணம் அதிகரிக்கின்றது என்பது உண்மைதான். ஆனால் நாம் ஒரு செல்வத்தைத் தேடப்போய், இன்னொரு செல்வத்தை இழந்து கொண்டிருக்கின்றோம் என்பதை உணர்கின்றோமா? மேசையில் ஒன்றாக உட்கார்ந்து, ஒரு குடும்பமாக, நம்மில் எத்தனை பேர் உணவருந்துகின்றோம்? புள்ளி விபரங்களை நோக்கினால் சோகம்தான் எஞ்சுகின்றது. தேவைகளின் அதிகரிப்பும், அழுத்தமும், நம்மை ஓடி ஓடி உழைக்க வைக்கின்றன. வினோதமான, வித்தியாசமான நோய்கள் நம்மைத் தேடிவருகின்றன. சுருக்கமாகச் சொல்வதானால், அவசர உலகில், அரங்கேறும் அநியாயங்கள் இவை என்றே சொல்லவேண்டி இருக்கின்றது.

நம்மை விட்டுவிடுவோம். நமது சமுதாயத்தின் நாளைய தூண்கள் என்று வர்ணிக்கப்படும் நமது குழந்தைகள் நிலைமை இன்று எப்படியிருக்கின்றது? மகா சோகத்திலும் சோகமான நிலையே , இவர்களின் நிலையாக இருக்கின்றது.

Fast Food என்று நாகரீக உலகில் வர்ணிக்கப்படும், அவசர உணவு வகையறாக்கள், இன்று நமது பிள்ளைகளைக் கூறுபோட்டு வருகின்றன. இவற்றோடு, ஐஸ்கிரீம் வகையறாக்களும் கைகோர்த்து, நமது பிள்ளைகளைச் சிறுவயதிலேயே குண்டுப் பிள்ளைகளாக்கி வருகின்றன. இந்தக் கோலம், நமது இளைய சமுதாயத்தை, சர்வநாசமாக்கி வருவது, உலகறிந்த உண்மை.
குழந்தையிலேயே குண்டாவது என்பது இன்று உலகளாவிய பிரச்சினையாக உருவெடுத்துள்ளது.

கடந்த வருடம் எடுத்த கணிப்பொன்றின்படி, உலகம் முழுவதும் வசிக்கும் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளில் 22 மில்லியன் பேர், எடை அதிகரிப்போடோ அல்லது குண்டாகவோ காணப்படுகின்றார்கள். இதே அறிக்கையில், பத்துப் பிள்ளைகளை எடுத்தால், இதில் ஒரு பிள்ளை எடை அதிகரிப்போடு காணப்படுவதாகவும், உலகெங்கும் 5-17 வயதுவரை உள்ள 155 மில்லியன் பிள்ளைகள், எடை அதிகரிப்போடு காணப்படுவதாகவும் இவர்கள் சுட்டிக்காட்டியிருக்கின்றார்கள். இந்த 155 மில்லியன் தொகையினால், 30-45 மில்லியன் வரையிலானவர்கள், குண்டுப் பிள்ளைகளாகவே நோக்கப்படுகின்றார்கள். இந்தப் பிள்ளைகள், உலகெங்குமுள்ள மொத்தத் தொகையினால் 2.3 சதவீதம் என்று கணிப்பிடுகின்றார்கள். திடுக்கிட வைக்கின்றன இந்தப் புள்ளிவிபரங்கள்.

இங்கே நாம் ஒன்றைக் கவனித்தாக வேண்டும். வயதை மீறிய எடை அதிகரிப்புள்ள பிள்ளைகள் (Overweight) குண்டுப் பிள்ளைகள் (Obese) என்று இரு பிரிவுகளாக, பிள்ளைகளின் எடைகளை நிபுணர்கள் நோக்குகின்றார்கள். சாதாரண எடை, அதை மீறிய எடை என்று எல்லை மீறும் பிள்ளைகளின் எடை, பின்பு குண்டுப் பிள்ளை என்ற பட்டத்தைக் கொடுத்துவிடுகின்றது.

குண்டுப் பிள்ளைகளாக இருப்பவர்கள் தொகை, நாட்டுக்கு நாடு வேறுபடுகின்றது என்பதையும், ஆய்வு சுட்டிக்காட்டத் தவறவில்லை. உதாரணத்திற்கு எகிப்து நாட்டை எடுத்துக் கொண்டால், 4 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளில் 25 சதவீதத்தினர் குண்டாகவே காணப்படுகின்றார்கள். சிலி, பெரு, மெக்ஸிகோ போன்ற இலத்தீன் அமெரிக்க நாடுகளிலும், 4-10 வயதுக்கு உட்பட்ட பிள்ளைகள், குண்டாக இருப்பது, எகிப்தைப் போல, 25 வீதத்திற்கு அதிகமாக இருக்கின்றது.

குண்டாக இருக்கும் பிள்ளைகளை ஒருகணம் நினைத்துப் பாருங்களேன். பொதுவாக, குண்டாக இருக்கும் பிள்ளைகளை, ஏனைய பிள்ளைகள் தமது நண்பர்களாக ஏற்றுக் கொள்வது மிகக் குறைவு என்றே சொல்ல வேண்டும். பிள்ளைகளின் பார்வையில் மட்டுமல்ல, வளர்ந்தவர்கள் கூட, உடல் பருத்த பிள்ளைகளை, வேண்டத் தகாதவர்களாகவே நோக்குகின்றார்கள். சோம்பேறிகள், முட்டாள்கள், அருவருப்பானவர்கள் என்றெல்லாம் குண்டுக் குழந்தைகளை ஏனைய குழந்தைகள் வர்ணிப்பதுண்டு. தமது சிறந்த நண்பர் என்று, எந்தக் குழந்தையும், இன்னொரு குண்டுக் குழந்தையை ஏற்றுக் கொள்வதேயில்லை.

துறுதுறுவென்று, ஓடியாடித் திரியும் சுபாவம், குண்டான குழந்தைகளிடம் இருப்பதேயில்லை. பெற்றோர்களும் சமயாசயமயங்களில், குண்டாக இருக்கும் தமது குழந்தைகளைத் திட்டிவிடுவதும் உண்டு. ஆறு தொடக்கம் பத்து வயதுக்கு உடபட்ட பிள்ளையாக, குண்டுப் பிள்ளை இருந்துவிட்டால், ஏனைய பிள்ளைகளின் சீண்டல் எப்பொழுதுமே அதிகமாக இருப்பதுண்டு.

குண்டாக வந்துவிட்டால், ஒரு குழந்தைக்கு வரும் கசப்பான அனுபவங்களைப் பார்த்தீர்களா? ஒரு குழந்தை குண்டாக இருந்தாலென்ன, மெலிந்த உடல்வாகு கொண்டதாக இருந்தாலென்ன, ஒவ்வொரு பிள்ளையும், தான் பிறரால் நேசிக்கப்படுவதை ஆவலோடு எதிர்பார்க்கின்றது. சமுதாயம், இந்தப் பிள்ளையைப் புறக்கணிக்கத் தொடங்கும்போது, இந்தப் பிள்ளை மனோரீதியாகப் பாதிக்கப்படத் தொடங்கிவிடுகின்றது. விளைவுகளும் விபரீதமாகி விடுகின்றன.
எனவே நமது பிள்ளைகள், உடல் பருத்து, சமுதாயத்திலிருந்து ஒதுக்கப்படுதற்கு முன்பாக, அவர்கள் உணவுண்ணும் முறையில், பெற்றோர்களாகிய நாம் மிகுந்த கவனமெடுக்க வேண்டியது அவசியமாகின்றது.

ஐரோப்பிய நாடுகளில்தான் இந்தக் கோலம் என்றில்லை. ஆசிய நாடுகளையும், இந்தக் குண்டுக் கோலம் பற்றிப் பிடித்திருக்கின்றது. தாய்லாந்து நாட்டில் பொதுவாகவே எல்லோருமே மெலிந்த தோற்றம் உடையவர்களாகவே காணப்படுவதுண்டு. ஆனால் இங்கு அத்துமீறி நுழைந்துள்ள மேற்கத்திய கலாச்சாரத்தின் முத்திரையை, நாம் இன்று அங்கு காணக்கூடியதாக இருக்கின்றது.

இன்றைய நிலையில், தாய்லாந்தின் 14 வீதமான பிள்ளைகள் குண்டாகக் காணப்படுகின்றார்கள் என்பது அதிர்ச்சியான செய்திதான். மக்டொனால்ட்ஸ் போன்ற உணவகங்களின் படையெடுப்பும், அங்குள்ள உணவை நமது பிள்ளைகள் விரும்பி உண்பதும், இந்த விரும்பப்படாத நிலையைத் தோற்றுவித்திருக்கின்றது என்று சாடுகின்றார் ஒரு தாய். அது மாத்திரமல்ல கணினி முன்னால் உடகார்ந்தபடி, கணினி விளையாட்டுக்களை விளையாடுவதும், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைப் பார்ப்பதும், பிள்ளைகளைச் சோம்பேறிகளாக்கி இருக்கின்றன. உடற்பயிற்சி வெகுவாகக் குறைந்து வருகின்றது. இதுதான் இன்றைய பிள்ளைகளுக்கு கொழுத்த உடலைக் கொடுத்து வருகின்றது என்று அபிப்பிராயப்படுகின்றார் ஒரு தாய்.

பெற்றோர்களின் கவனத்திற்கு

இன்றைய பிள்ளைகளுக்கு, அதிக நேர உடற்பயிற்சி தேவைப்படுகின்றது என்கின்றது பிந்திய பீபீசி செய்தியன்று. வல்லுனர்களின் கருத்துப்படி, ஒரு பிள்ளை தினமும், 90 நிமிடங்களாவது, உடற்பயிற்சிக்குச் செலவிட வேண்டும் என்று சொல்லப்படுகின்றது.

பிள்ளைகள் பலவழிகளில், உடற்பயிற்சிகளை தினமும் மேற்கொள்ளலாம் என்கிறார்கள் வல்லுனர்கள். தினமும் பாடசாலைக்கு, மிதி வண்டிகளில் சென்றுவரலாம். இது ஒரு சிறந்த உடற்பயிற்சி என்பதில் சந்தேகமேயில்லை. பாடசாலைகளில், வெவ்வேறு விளையாட்டுகளில் பங்குபெற்றால், அதுவும் மிகச் சிறந்த உடற்பயிற்சியாகிவிடுகின்றது. பல பிள்ளைகளை , காரில் ஏற்றிச் சென்று, பாடசாலை வாசலில் பெற்றோர்கள் விட்டுச் செல்லும் கோலமே இன்று தொ¢கின்றது. பிள்ளைகளுக்கு சொகுசான வாழ்க்கை தேடி வந்திருப்பதாக, பார்வையில் தொ¢கின்றது. ஆனால் நிஜமோ வேறு. பிள்ளைகளின் உடல்நலம் நாசமாக்கப்படுகின்றது என்பதுதான் நிஜம்.

குண்டாக ஒரு பிள்ளை வருவதற்கு , தவறான உணவுப் பழக்கம் மாத்திரமல்ல, பரம்பரை உடல்வாகும் காரணமாகின்றது. பெற்றோர்களோ அல்லது பெற்றோர்களின் பெற்றோர்களோ உடல் பருத்தவர்களாக இருந்தால், பிள்ளைகள் குண்டாக வருவதற்கு , வாய்ப்புகள் அதிகம்.
ஏனைய பிள்ளைகளைப் போல, உங்களையும் நேசிக்கின்றோம் என்பதை, குணடாகி விட்ட பிள்ளைக்குத் தெரியப்படுத்தப் பெற்றோர்கள் தவறவேண்டாம்.

அதிக பழங்களை, மரக்கறி வகைகளை உணவில் சேர்த்துக் கொள்ளப் பழக்குங்கள். பிள்ளைகளைக் கொண்டே, கடைகளில் இவற்றைத் தெரிவு செய்து வாங்கும் பழக்கத்தை நடைமுறைக்குக் கொண்டுவாருங்கள். இனிப்புப் பண்டங்கள் வாங்கிக் கொடுப்பதை வெகுவாகக் குறைத்துக் கொள்ளுங்கள்.

உங்கள் பிள்ளை, காலை ஆகாரத்தைத் தவிர்க்காமல் பார்த்துக் கொள்வது, உங்கள் முக்கிய கடமையாகின்றது. காலை ஆகாரத்தைத் தவிர்க்கும் குழந்தை, களைப்போடும், பசியோடும் வீடு வரும். பல நொறுக்குத் தீனிகளை, பசி காரணமாகத் தேடும். இந்த நிலை வேண்டவே வேண்டாம். குடும்பமாக உட்கார்ந்து உங்கள் பிள்ளைகளோடு, ஒரு நாளில் ஒரு நேரத்திலாவது, உண்ணப் பழக்குங்கள். இந்த வழியில், உங்கள் பிள்ளை, பல்வேறுபட்ட உணவு வகைகளை விரும்பி உண்ணக் கற்றுக் கொள்ளும்.

ஓர் உணவை பிள்ளை உண்ண மறுத்தால், மனம் சோர்ந்துவிடாதீர்கள். பிள்ளையின் போக்கில் விட்டுவிடுங்கள். பிள்ளை தவிர்க்க நினைக்கும் உணவின் முக்கியத்துவத்தை அடிக்கடி சொல்லிக்காட்டுங்கள். மீண்டும் மீண்டும் முயற்சி செய்யுங்கள்.. பத்தாவது தடவை, நீங்கள் கொடுக்கும் உணவைப் பிள்ளை ஒருவேளை ஏற்றுக்கொள்ளலாம்.

கோலா அருந்துவதைக் குறைத்து, நீரை விரும்பி அருந்தும் பழக்கத்தைக் குழந்தைக்குச் சொல்லித் தாருங்கள். புதியதொரு பழக்கத்தைக் குழந்தைக்குச் சொல்லித் தருவதில், நிறையச் சிக்கல்களை நீங்கள் எதிர்நோக்கலாம். ஆனால் இந்த முயற்சியின் கனிகளைச் சுவைக்கும்போது, நீங்கள் அடையும் ஆனந்தம், வர்ணிப்புக்கு அப்பாற்பட்டது.

பிள்ளை விரும்பாத உணவைச் சாப்பிட்டால், பிள்ளை விரும்பும் ஓர் உணவு அதிகமாகக் கிடைக்கும் என்று இடையிடையே ஆசைகாட்டுங்கள். இங்கேயும் இலஞ்சமா என்று கேட்காதீர்கள். பிள்ளைகளின் அன்பைக் கவருவது, உங்களுக்கு மிகமிக அவசியமாகின்றது.
அளவில் கொஞ்சமாக உணவைப் பரிமாறுங்கள். பின்பு பிள்ளையோடு நயமாகப் பேசி, இன்னும் கொஞ்சம் உணவை ஊட்டுங்கள். இது பிள்ளைக்கு, உணவில் அதிக விருப்பை ஏற்படுத்த ஒரு யுக்தியாகும்.

அவசர உலகில், அறிவுரைகள் சொல்வது சுலபம். நடைமுறையில் கொண்டுவருவது மிகச் சிரமம் என்கிறீர்களா? மனமுண்டானால் இடமுண்டு என்பதை மறந்துவிட்டீர்களா? ஆர்வம் இருந்தால், நம்மால் எதையும் சாதிக்க முடியும். குண்டான குழந்தை என்பதால், ஏனைய பிள்ளைகளால் ஒதுக்கப்பட்டு, பலவற்றில் பின்னிற்கும் ஒரு நிலை, உங்கள் குழந்தைக்குத் தேவைதானா?

வேண்டவே வேண்டாம்.
இன்றே செய்வோம்.
நன்றே செய்வோம்.

சிறந்த ஆரோக்கியமே உயர்ந்த செல்வம் என்கிறார்கள்.

நன்றி : ஏ.ஜே.ஞானேந்திரன்

Jul 13, 2009

நீரிழிவு நோயைச் சமாளிப்பது எப்படி?

நீரிழிவு நோயைச் சமாளிப்பது எப்படி?



நீரிழிவு நோய் என்பது என்ன?

அன்றாட அலுவல்களுக்குத் தேவையான சக்தியை உற்பத்தி செய்யும் குளுக்கோஸ் (சர்க்கரை) தான் உடலிலுள்ள செல்களுக்குத் தேவை. நாம் சாப்பிடும் உணவுதான் செரித்த பிறகு குளுக்கோஸாக மாறுகிறது. குளுக்கோஸ் இரத்த ஓட்டத்தில் கலந்து உடலிலுள்ள வெவ்வேறு செல்களைச் சென்றடைகிறது. உடலிலுள்ள கணையம் உற்பத்தி செய்யும் இன்சுலின் என்னும் ஹார்மோன்தான் உடலிலுள்ள செல்களைச் சென்றடையும் குளுக்கோஸ்க்கு மிகவும் அத்தியாவசியமாகும். போதுமான இன்சுலின் சுரக்காத போது, குளுக்கோஸ் செல்களுக்கு செல்ல இயலுவதில்லை. எனவே இரத்த ஓட்டத்தில் குளுக்கோஸ் அதிக அளவில் தங்கிவிடுகிறது. இந்த நிலைதான் ஹைப்பார்க்ளைசீமியா எனப்படும் நீரிழிவு நோய் ஆகும்.

உங்களுக்கு நீரிழிவு நோய் உள்ளதா?

கீழே இருக்கும் அறிகுறிகளையும் அதற்கு கொடுக்கப்பட்டுள்ள மதிப்பீடுகளையும் குறித்துக் கொள்ளுங்கள்.
1. அடிக்கடி சிறுநீர் கழித்தல் – 4
2. எப்போதும் பசித்தல் – 2
3. தண்ணீர் அதிகமாகக் குடிப்பது – 4
4. எப்போதும் களைப்பாக இருக்கும் – 2
5. ஆறாத புண் – 2
6. பிறப்புறுப்பில் இன்பெக்சன் – 3
7. உடலுறவில் ஈடுபாடு இல்லாதிருத்தல் – 2
8. காரணமில்லாமல் எடை குறைதல் – 2
9. இரத்த சொந்தங்களில் வேறு எவருக்கேனும் நீரிழிவு - 2
10. மிகக் கூடுதல் எடை – 3
11. கால் மரத்துப் போய் உறுத்துதல் – 2
12. மங்கலான பார்வை – 2
நீங்கள் உங்களுக்காகக் குறித்துள்ள மதிப்பீட்டின் கூட்டுத் தொகை 7-க்கு அதிகமாக இருந்தால் உங்களுக்கு நீரிழிவு நோய் இருக்கலாம். எனவே தகுந்த மருத்துவரை அணுகி உங்களுக்கு நீரிழிவு நோய் இருக்கிறதா? என்பதை பரிசோதித்துக் கொள்ளுங்கள்.

நீரிழிவை கவனிக்காததால் ஏற்படும் விளைவுகள்

நீரிழிவை துவக்கத்திலேயே கவனிக்கவில்லை என்றால் நிலைமை மோசமாகிவிடும் . கட்டுக்குள் இல்லாத நீரிழிவு ,பல முக்கியமான உடல் உறுப்புகளையும் செயல்பாடுகளையும் பாதித்துவிடும். குறிப்பாக,

பார்வையை இழக்க நேரிடலாம் அல்லது பார்வை மங்கலாம்.

சிறுநீரகங்கள் சேதமடையலாம்

இன்பெக்சன் அடிக்கடி ஏற்படலாம்

காங்கரீன் எனும் புண், பாதத்தில் பிரச்சனைகள் வரலாம்.

உடலுறவில் இயலாமை ஏற்படலாம்

மூளைச்சேதமும் ,மாரடைப்பும் ஏற்படும் வாய்ப்பு அதிகரிக்கலாம்.

நீரிழிவு நோயைத் துவக்கத்திலேயேக் கட்டுப்படுத்திவிட்டால் ,பல சிக்கல்கள் தடுக்கப்பட்டு நீங்கள் சாதாரண வாழ்க்கை வாழ உதவும்.

நீரிழிவு நோயைச் சமாளிப்பது எப்படி?

நீரிழிவு நோயின் சிகிச்சையில்
1. உணவுமுறை
2. உடற்பயிற்சி
3. நோயின் தீவீரத்தைத் தவறாமல் கண்காணித்தல் மற்றும் மாத்திரைகள் எடுத்துக்கொள்தல்
4. இன்சுலின் பயன்படுத்துதல்
இந்த சிகிச்சைகளைத் தகுந்த மருத்துவர்களின் ஆலோசனைகள் மூலம் எடுத்துக் கொள்வதால் நீரிழிவைக் கட்டுக்குள் வைத்துக் கொள்ள முடியும். உங்களுக்கு நீரிழிவு இருந்தால் அதைக் குணப்படுத்த முடியாது. எனவே குணப்படுத்துவதாகச் சொல்லி ஏமாற்றுபவர்களின் வலையில் விழுந்து விடாமல் கவனமாயிருக்க வேண்டும்.

1. உணவு முறை

சப்பாத்தி அல்லது கோதுமை ரொட்டி , அரிசி, கேழ்வரகு போன்ற கார்போ- ஹைட்ரேட்கள் நிறைந்தவற்றைச் சாப்பிடுங்கள். இவைகளால் செலவுகளுமில்லை. நீங்கள் பசியுடன் இருந்தாலும் இனிப்புப் பதார்த்தங்கள் சாப்பிடும் பழக்கத்தை நிறுத்திவிடும்.

கொஞ்சமாகவும், நேரம் தவறாமலும் சாப்பிடவும். சாப்பாட்டு நேர இடைவெளியில் குறிப்பிட்ட சில பழங்கள் அல்லது காய்கறிகள் போன்ற சத்துள்ளவற்றைச் சாப்பிடவும்.

கொழுப்பு நீக்கப்பட்ட பால் மற்றும் தாவர எண்ணெய்யைப் பயன்படுத்தவும்.

சமையல் முறையை மாற்றி, வேகவைத்த, தீயில் வாட்டிய, நீராவியில் சமைத்த பதார்த்தங்களைச் சாப்பிடுங்கள்.

கொழுப்பு நிறைந்தவற்றை அதிகம் சாப்பிடக்கூடாது. கொழுப்பு பதார்த்தங்களான நெய், வெண்ணெய், பொறித்தவைகளான பூரி, சமோசா போன்றவற்றை தவிர்க்க வேண்டும். கொழுப்பு மிக்க இறைச்சி, வெண்ணெய் மற்றும் பொறித்த உணவு வகைகளைத் தவிர்க்க வேண்டும்.

சர்க்கரை, வெல்லம்,தேன்,ஜாம், கேக்குகள் மற்றும் சாக்லேட்கள் போன்ற சர்க்கரைச் சத்து அதிகமுள்ள உணவு வகைகளைத் தவிர்க்க வேண்டும்.

மீன்,கோழி , பாலாடைக்கட்டி மற்றும் ஸ்டார்ச் சத்துள்ள பதார்த்தங்களைக் குறைவாகச் சாப்பிட வேண்டும்.

நீரிழிவு நோய் உள்ளவர்கள் விரதம் இருக்கலாமா?

நீரிழிவு நோய்க் கட்டுப்பாட்டிற்குள் இருந்த நீங்கள் விரதம் கடைப்பிடிக்க விரும்பினால் முதலில் உங்கள் மருத்துவரை சந்தித்து ஆலோசிக்கவும். அவர் உடல்நிலைக்கேற்ப உணவு முறைகளையும் மருந்துகளையும் தெரிவிக்கலாம்.

நீரிழிவு நோய்க்கான உணவு வகைகள்

உங்கள் மருத்துவரிடம் உங்களுக்காக ஒரு உணவு அட்டவணையைத் தயார் செய்யச் சொல்லுங்கள். அது திரும்பத் திரும்ப ஒரே மாதிரியான சலிப்படையச் செய்யும் வகையில் இருக்காது. ஒருவருடைய தேவைக்கேற்பவும் விருப்பத்திற்கேற்பவும் பல மாற்று உணவு வகைகளை நீங்கள் சேர்த்துக் கொள்ள முடியும்.

மாற்று உணவு வகைகள் என்றால் என்ன?



ஆகாரத்தில் மாற்றங்கள் எளிதாக இருக்கும் வண்ணம் உருவாக்கப்பட்ட சமமாக இருக்கும் மற்ற உணவு வகைகள்தான் மாற்று உணவு வகை.ஓர் உணவு வகைக்குப் பதிலாக கீழ்கண்ட 7 மாற்று உணவு வகைளை மாற்றி மாற்றி சாப்பிடலாம்.

1. காய்கறிகள்
2. கார்போஹைட்ரேட்ஸ்.
3. பழங்கள்
4. இறைச்சி, மீன் மற்றும் பருப்புகள்
5. பால் மற்றும் பால் தயாரிப்புகள்
6. தானியங்கள்
7. எண்ணெய்,கொழுப்பு மற்றும் கொட்டை வகைகள்.

2. உடற்பயிற்சி.

நீரிழிவு நோய் உள்ளவர்கள் உடற்பயிற்சி செய்வதால்,
1. இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த உதவுகிறது.
2. எடையைக் கட்டுக்குள் வைக்க உதவுகிறது.
3. நல்ல உடல்நலத்துடன் இருக்கிறோம் என்ற உணர்வை அதிகரிக்கிறது.
4. உங்கள் உடலில் இன்சுலினுக்கு உகந்த நிலையை அதிகரிக்கிறது.

உடற்பயிற்சியில் கவனிக்க வேண்டியவை.

உங்கள் உடலுக்கேற்ற பயிற்சியைப் பற்றி முதலில் உங்கள் மருத்தவரிடம் கலந்தாலோசித்துக் கொள்வது நல்லது.

கொஞ்சம் கொஞ்சமாக ஆரம்பித்து தவறாமல் செய்யவும்

மிதமான ஓட்டம், நீச்சல் போன்ற திடமான விளையாட்டுக்களில் பங்கெடுத்துக் கொள்ளவும்.

காலி வயிற்றுடன் உடற்பயிற்சி செய்யக் கூடாது.

இன்சுலின் ஊசி போட்டுக் கொண்ட உடனேயே உடற்பயிற்சி செய்வதைத் தவிர்க்க வேண்டும்.

இரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகமானதாக இருந்தால் உடற்பயிற்சி செய்யக் கூடாது. நீரிழிவு கட்டுக்குள் இல்லாத போதும் உடற்பயிற்சி செய்யக் கூடாது.

3. மாத்திரைகள்

சில சமயங்களில் , இரத்தத்தில் உள்ள அதிக சர்க்கரையைக் குறைக்க உணவுக் கட்டுப்பாடு மற்றும் உடற்பயிற்சி மட்டும் போதாது. சர்க்கரை அளவை இரத்தத்தில் குறைக்கும் மாத்திரைகள் எடுத்துக் கொள்ளலாம். இது இரத்தத்தில் சர்க்கரை அளவு குறைய உதவும்.

சில மாத்திரைகள் இன்சுலின் உற்பத்தியை அதிகரிக்க, கணையத்தைத் தூண்டிவிடுகிறது. மாத்திரைகள் சிறப்பாகச் செயல்புரிய , இன்சுலின் சுரக்கும் அளவிற்கு நோயாளியின் கணையம் நல்ல நிலையில் இருக்க வேண்டும்.

சில மாத்திரைகள் , செல்லினுள் இன்சுலின் நுழைந்து செயல்புரிய உதவுகிறது. சில மாத்திரைகள் குடலிலிருந்து குளுக்கோஸ் இரத்தத்தில் கலப்பதைக் குறைக்க உதவுகின்றன.

4.இன்சுலின்

நீரிழிவு முற்றினால், பல நீரிழிவு நோயாளிகளுக்கு இன்சுலின் தவிர்க்க இயலாததாகி விடுகிறது. உங்கள் மருத்துவர் உங்களுக்கு இன்சுலின் போட்டுக் கொள்ள பரிந்துரை செய்து விட்டால் இன்சுலின் போட்டுக் கொள்ளத் தொடங்குவது நல்லது.

இன்சுலின் எப்படி செயலாற்றுகிறது?

இரைப்பைக்குப் பின்னால் உள்ள உறுப்பான கணையத்திலிருந்து உற்பத்தியாகும் ஒரு ஹார்மோன்தான் இன்சுலின். இன்சுலின் சுரக்காமல் போனால் அல்லது குறைவாகப் போனால் அல்லது செயல்பட முடியாமல் போனால் செல்களுக்குள் சர்க்கரை (குளுக்கோஸ்) செல்ல முடியாது. இரத்தத்திலேயே அதிக அளவில் தங்கிவிடும். எனவே நீரிழிவு முற்றினால், இன்சுலின் தவிர்க்க இயலாததாகி விடுகிறது. இன்சுலின் ஊசி போட்டுக் கொண்ட பிறகு இரத்த ஓட்டத்தில் கலந்து , உடல் முழுவதும் பரவுகிறது. செல்லின் மேற்பரப்பில் படர்ந்து செல்லினுள் சர்க்கரை புக வழி செய்கிறது.

இன்சுலினின் வகைகள்

இன்சுலின் இனம், செயல்பாடு மற்றும் அதன் சக்தியை வைத்து பிரிக்கப்பட்டுள்ளது.

இன்சுலின் அதன் மூலத்தைப் பொறுத்து ஹியூமன், போர்சைன், போவைன் போன்ற வகைகளாகப் பிரிக்கப் பட்டுள்ளன. ஹியூமன் இன்சுலின் மரபியல் மூலமாக அல்லது செமி சிந்தெடிக் முறையில் தயாரிக்கப் படுகிறது. போர்சைன், போவைன் இன்சுலின் முறையே பன்றி மற்றும் மாடுகளின் கணையங்களிலிருந்து தயாரிக்கப்படுகிறது.

இன்சுலின் செயல்படும் கால அளவு, அதன் செயல்படும் திறன்களைக் கொண்டும் பல வகைகளாகப் பிரிக்கப்பட்டு உள்ளது.

இன்சுலின் ஊசி எப்படி தாமாகவே போட்டுக் கொள்வது?



முதலில் உங்கள் கைகளை நன்றாகக் கழுவிச் சுத்தம் செய்து கொள்ளவும்.

உங்கள் இன்சுலின் சக்திநிலைக்கு ஏற்ற சிரின்ஜைத் தேர்வு செய்து கொள்ளுங்கள். அதாவது 40 ஐ.யூ.இன்சுலினுக்கு 40 ஐ.யூ. சிரின்ஜ். நீங்கள் கலங்கலான இன்சுலினைப் பயன்படுத்தினால், உள்ளே இருக்கும் வண்டல் முழுவதும் நன்கு கலக்கும் வரையில் பாட்டிலைக் கவிழ்த்துக் குலுக்கவும்.

இன்சுலின் செலுத்த வேண்டிய அளவு வரை சிரின்ஜ் மூலம் பாட்டிலை நேராகப் பிடித்து காற்றை மெதுவாக உள்ளே செலுத்தவும்.

தேவையான அளவு இன்சுலினை இழுக்கவும். காற்றுக் குமிழிகளைப் போக்க சிரின்ஜை மெதுவாகத் தட்டவும்.

ஊசி போட வேண்டிய இடத்தில் உள்ள தோலைப் பிடித்து அகலமான மடிப்பினுள் தோலின் அடியில் உள்ள அடுத்த திசுவிற்கு எதிராக 90 டிகிரி கோணத்தில் ஊசியைக் குத்தவும்.

இன்சுலினை மெதுவாகச் செலுத்தவும் ஊசியை வெளியே எடுக்கும் பொழுது, அந்த இடத்தில் வேறொரு விரலால் அழுத்திக் கொண்டே எடுக்கவும்.

தோலின் அடியில் உள்ள திசுவில் மாறுதல் வராமல் இருக்க ஊசி போடும் இடத்தை மாற்றிக் கொண்டே இருக்க வேண்டியது அவசியம்

நினைவில் வைத்திருக்க வேண்டியவை.

நீங்கள் நீரிழிவைப் பற்றி அறிந்து, புரிந்து சமாளிக்க மனம் வைத்தால் போதும். மற்றவரைப் போல ஆரோக்கியமாக, உற்சாகமிக்க, மனம் நிறைந்த வாழ்க்கை வாழலாம்.

உங்கள் நோயைக் கட்டுப்படுத்த வேண்டிய முக்கிய நபர் நீங்கள்தான். மருத்துவரும்,மற்றவர்களும் உங்களுக்கு உறுதுணையாக இருப்பார்கள் அறிவுரை வழங்குவார்கள்.

நீங்கள் நோயுற்றிருந்தாலும் இன்சுலினைத் தொடர்ந்து எடுத்துக் கொள்ளுங்கள். உங்களால் சாப்பிட முடியாத போது திரவநிலை உணவை எடுத்துக் கொள்ளுங்கள்.

சிகிச்சை எடுத்துக் கொண்டால் மட்டும் போதாது. சிகிச்சையின் முடிவுகளைத் தவறாமல் குறித்து வைத்துக் கொண்டால்தான் நீரிழிவை சிறப்பாகச் சமாளிக்க முடியும்.

தவறாமல் பரிசோதனைகள் செய்வதும், கவனமாகக் குறிப்பெடுத்துக் கொள்வதும் மிக முக்கியம்.

ஹைப்போக்ளைசீமியாவை உடனடியாக சமாளிக்க கையில் குளுக்கோஸ், சர்க்கரை போன்ற இனிப்புகளை வைத்துக் கொள்ளுங்கள்.

உங்கள் கைகள், பாதங்கள், கண்கள், பற்கள் மற்றும் சருமத்தை நன்கு கவனித்துக் கொள்ளவும்.

சரிவிகித உணவு, தவறாத உடற்பயிற்சி, மருந்துகள் மற்றும் நடக்கும் என்ற நம்பிக்கை போன்றவற்றால், நீரிழிவு இருந்தாலும் உங்கள் இலக்கை அடைய உதவும்.

நன்றி :- " Magnus Novo Nordisk " வெளியிட்ட நீரிழிவுக்கான சிறு கைப்பிரதி.

மாறுகண் அதிர்ஷ்டத்தின் அறிகுறியா?

மாறுகண் அதிர்ஷ்டத்தின் அறிகுறியா?



மாறுகண்

ஒரு கண் மட்டும் அல்லது இரண்டு கண்களும் மாறுபட்ட திசையில் இருப்பது மாறுகண் எனப்படும்.

சிலருக்கு மாறுகண் எப்போதும் இருக்கும் மற்றும் சிலருக்கு அவ்வப்போது ஏற்பட்டு மறையும்.

மாறுகண் உடைய குழந்தைகள் பார்க்கும் போது, ஒரு கண் நேராகவும், மறு கண் உட்புறமோ, வெளிப்புறமோ, மேல்நோக்கியோ அல்லது கீழ்நோக்கியோ இருக்கலாம்.

உரிய காலத்தில் சிகிச்சை அளிக்காவிட்டால் சோம்பலுற்ற கண் என்ற நிலை உருவாகி நிரந்தர பார்வையிழப்பை ஏற்படுத்தும்.

மாறுகண்ணின் காரணங்கள்

பரம்பரையாக வருதல்

கண்தசைகள் பாதிக்கப்படுதல்

கண் தசைகளுக்கான நரம்பில் கோளாறு ஏற்படுதல்

கண்புரை, கருவிழி பாதிப்பு, கண் விழித்திரை கோளாறு, கண் நரம்பு கோளாறு, புற்று நோய்க் கட்டிகள், தூரப்பார்வை, கிட்டப்பார்வை ஆகியவற்றால் ஏற்படும் குறைவான பார்வை

காயம்படுதல்

அறிகுறிகள்

ஒரு கண் மட்டும் அல்லது இரண்டு கண்களும் மாறுபட்ட திசையில் இருக்கலாம்.

பார்வையில் குறைபாடு இருக்கலாம்.

பிரகாசமான வெளிச்சத்தில் ஒரு கண்ணை மட்டும் மூடிப் பார்க்கக் கூடும்.

இரண்டு கண்களையும் இணைத்துப் பார்க்க முயற்சிக்கும் போது தலையைச் சாய்த்தோ அல்லது திருப்பியோ பார்ப்பது போன்ற அறிகுறிகளும் சில சமயங்களில் தென்படலாம்.

சில சமயங்களில் பார்க்கும் பொருள் இரண்டாகத் தெரியலாம்.

மாறுகண் அதிர்ஷ்டத்தின் அறிகுறியல்ல. அது உங்கள் குழந்தையின் பார்வையையும் தோற்றத்தையும் பாதிக்கும்.

சிறு குழந்தைகளுக்கு மாறுகண் இருந்தால் இரண்டு வயதிற்குள்ளேயே உரிய சிகிச்சை அளித்தால் நிரந்தரமான பார்வை இழப்பைத் தவிர்க்கலாம்.

குழந்தை வளர்ந்த பிறகு, சிகிச்சை மூலம் வெளித்தோற்றத்தை மட்டுமே சரி செய்யலாம். இழந்த பார்வையைத் திரும்பப் பெற முடியாது.

நிரந்தர பார்வையிழப்பைத் தவிர்க்க சிகிச்சை முறைகள்

1. தூரப்பார்வை மற்றும் கிட்டப்பார்வையால் ஏற்படும் மாறுகண் உள்ளவர்களுக்கு தகுந்த கண்ணாடி அணிவிப்பதன் மூலம் பார்வையிழப்பைத் தவிர்க்கலாம்.

2. கண்களுக்கு பயிற்சி: மாறுகண் இல்லாத நல்ல பார்வையுடைய கண்ணை மறைத்து, மாறுகண் உடைய கண்ணால் பார்க்க வைப்பதன் மூலம், அந்த கண்ணின் பார்வையை மேம்படுத்தலாம்.

3. அறுவை சிகிச்சை:

நல்ல கண்ணை மூடி, மாறுகண்ணால் பார்க்க வைக்கும் பயிற்சி மற்றும் தகுந்த கண்ணாடி அணிவிப்பதன் மூலம், பார்வை மேம்பட்ட பிறகு மாறுகண்ணுக்கு அறுவை சிகிச்சை செய்து கொள்ளலாம்.

குழந்தைகளுக்கு மயக்க மருந்து கொடுத்து அறுவை சிகிச்சை செய்யப்படும் .

மயக்க மருந்து கொடுக்கப்படும் குழந்தைகளுக்கு, அந்த சமயத்தில் காய்ச்சல், ஜலதோஷம், இருமல் போன்றவை இருக்கக் கூடாது.

ஒரே சமயத்தில் இரண்டு கண்களிலுமோ அல்லது ஒரு கண்ணில் மட்டுமோ அறுவை சிகிச்சை செய்யலாம்.

விழி வெண்படலத்தில், அதாவது விழிக்கோளத்தின் வெள்ளைப் பகுதியில்தான் அறுவை சிகிச்சை செய்யப்படும்.

அறுவை சிகிச்சை முடிந்த பின் ஒரு நாள் மட்டும் மருத்துவமனையில் தங்கினால் போதும்.

இந்த அறுவை சிகிச்சை செய்வதோடு சிகிச்சை முடிந்து விடுவதில்லை. தெளிவான பார்வையைப் பெறத் தொடர்ந்து கண்ணாடி அணிய வேண்டியிருக்கலாம். நல்ல நிலையில் உள்ள கண்ணை மறைத்து, மாறு கண்ணால் மட்டும் பார்க்க வைக்கும் பயிற்சியை அறுவைச் சிகிச்சைக்குப் பிறகும் நீடிக்க வேண்டியிருக்கலாம்.

நன்றி :- மதுரை அரவிந்த் கண் மருத்துவமனை வெளியிட்ட சிறு கைப்பிரதி.