Mar 2, 2009

வாங்க நினைத்த லேட்டஸ்ட் மாடல் செல்போன் !

சரி எல்லோரும் வைத்து இருக்கிறார்களே நாமும் வைத்துக்கொள்ளலாம் என்று நினைத்து எனக்கென்று செல்போன் வைத்துக்கொள்ள ஆரம்பித்து ஒரு நாலைந்து வருடம் ஆகிறது.

முதல் போன் ஒரு சாதாரண போன் தான். மார்க்கெட்டுக்கு வந்து எப்படியும் இரண்டு மூன்று வருடமாவது இருக்கும். இதில் பேசலாம், எஸ் எம் எஸ் உண்டு, அலாரம் வைத்துக்கொள்ளலாம். அவ்வளவுதான்.

ரேடியோ போன்ற வசதிகளெல்லாம் அப்பொழுது அவ்வளவாக பிரபலம் அடையவில்லை (போட்டோ, எம் பி 3.. மூச்).

அப்பொழுதே பேசிக் வசதிகள் மட்டுமே உள்ள போன்களுக்கு கிட்டத்தட்ட ரூ. 3000க்கு மேல் விலை இருக்கும்.

கேமரா உள்ள போன்கள் ? கிட்டத்தட்ட ரூ 12,000/- (சுமார் 4, 5 வருடங்களுக்கு முன்பு)

எதற்கு சொல்ல வந்தேன் என்றால். டெக்னாலஜி வேகமாக மாறிக்கொண்டே இருக்கிறது. பல்வேறு வசதிகள் வந்துகொண்டே இருக்கின்றன. இப்பொழுது பல்வேறு வசதிகள் கொண்ட போன்கள் இப்போது மிகக் குறைந்த விலையில் கிடைக்கின்றன. (சீன மாடல்கள் வேறு)

ரொம்ப நாளாக பழைய மாடலையே வைத்திருக்கிறோமே லேட்டஸ்டாக ஒன்று வைத்துக்கொள்ளலாமே என்று நினைத்தேன்

சரி, எந்தமாடல் நமக்கு வேண்டும் என்று தேர்ந்தெடுப்பதில் ஏகப்பட்ட குழப்பங்கள்.

நானே விளம்பரங்களையெல்லாம் பார்த்து ஒரு மாடல் பற்றி யோசித்துவிட்டு (கிட்டத்தட்ட 7 ஆயிரம் ரூபாய்), ஒரு நண்பரிடம் யோசனை கேட்டேன்.

இதில் என்னென்ன வசதிகள் உள்ளன? எதனால் இதை செலக்ட் செய்கிறீர்கள் என்றார்.

ஒவ்வொன்றாக சொல்ல ஆரம்பித்தேன்.

கேமரா 1.2 மெகாபிக்சல்
எப் எம் ரேடியோ, எம்.பி.3,
புளூடூத்
மெமரிகார்டு


பொறுமையாகப் பார்த்துவிட்டு நண்பர் விளக்கம் சொல்ல ஆரம்பித்தார்.

1. நீங்கள் போட்டோ எடுப்பதில் எந்த அளவுக்கு ஆர்வமாக இருப்பீர்கள்? டைரி எழுதுவதைப்போன்று தான் இதுவும் இருக்கும். ஆரம்பத்தில் ஆர்வமாக 30, 40 போட்டோ வரை எடுப்பீர்கள், தரமாகவும் இருக்காது. பிறகு கேமரா உபயோகம் இருக்காது.

2. எப் எம் ரேடியோ ? இப்பொழுதெல்லாம் பிளாட் பார்மில் கூட தரமான டிஜிட்டல் ரேடியோ ரூ 30க்கு கிடைக்கும்.

3. எத்தனை எப் எம் ஸ்டேஷன்கள் உள்ளன! அவைகளைக் கேட்டுக்கொள்ளலாமே எதற்கு திரும்பத் திரும்ப அதே எம் பி 3 பாடல்கள்?

4. புளூடூத், மெமரிகார்டு? இதை எப்படி பயன்படுத்துவது என்றே பலருக்கு இன்னும் புரியவில்லை. அவசியம் தானா?

5. பழைய போனை என்ன செய்வீர்கள்?


சரி இவரிடம் கேட்டால் இன்னும் ஏதாவது அட்வைஸ் செய்வார், நாமாகக் கடைக்கு சென்று பார்ப்போம் என்று முடிவு செய்து போய் விலை கேட்டேன்.

கவுன்டரில் இருந்தவர், சார் இந்த மாடலுக்கு ஆபர் முடிந்துவிட்டது. தற்பொழுது ரூ 7,350. ஆனால் எக்சேஞ் ஆபர் இருக்கிறது. என்றார்.

என் பழைய போனைக் கொடுக்க அதை திருப்பி திருப்பி பார்த்துவிட்டு பிறகு ஓப்பன் செய்து பாட்டரி ஒரிஜினலா என்றெல்லாம் பார்த்து விட்டு சொன்னார்.

“நாங்கள் ரூ 100க்கு த்தான் எடுப்போம், உங்களுக்கு ரூ125 போடலாம் என்றார்”.

எக்சேஞ் விலையைக் கேட்டு அதிர்ந்து போய் (ரூ 3200 க்கு வாங்கிய போனுக்கு ரூ.125 ஆ!!) பிறகு பார்த்துக்கொள்ளலாம் என்று கிளம்பி விட்டேன்.

வரும் வழியில் ஒரு செல்போன் ஆக்ஸஸரீஸ் கடையில் காண்பித்து என்ன செய்யலாம் என்று கேட்டேன். அவர் கழட்டிப்பார்த்துவிட்டு சொன்னார். “பேட்டரி வீக்காக இருக்கிறது. நல்ல தரமான பேட்டரி வந்திருக்கிறது. டுப்ளிக்கேட் தான் ஆனாலும் நல்ல குவாலிட்டி, பேனல் கூட மாற்றிக்கொள்ளலாம், மொத்தம் ரூ 120 ஆகும் என்றார்.

சரி என்று மாற்றச்சொல்லி வாங்கிக்கொண்டு பிளாட் பார்மில் எப் எம் ரேடியோ ரூ 45 (டிஜிட்டல்) வாங்கிக்கொண்டு வீடு வந்து சேர்ந்தேன். இன்று வரை ஒன்றும் பிரச்னையும் இல்லை நன்கு இயங்கிக்கொண்டிருக்கிறது.

அதே நண்பரை போன வாரம் மவுண்ட் ரோடில் வைத்துப் பார்த்தேன். சில பல விசாரிப்புகளுக்குப் பிறகு அவர் கையில் இருந்த செல் போனை கவனித்தேன்.

சொன்னார் “லேட்டஸ்ட் போன், டச் ஸ்கிரீன். அனைத்து வசதிகளும் இருக்கிறது!! விலை ரூ. 18,260/- சீப்பாக கிடைத்தது!! மார்க்கெட் விலை ரூ. 23000 !!”

No comments: