Mar 4, 2009

வேர்கடலையும், செருப்பும், புத்தகமும் மற்றும் மேட்டர் சிடியும்

(ஹி ஹி! பின்நவினத்துவம், நான்லினியர், கவிதைகளும் இன்றைய இலக்கியமும்! அப்டீன்னெல்லாம் எழுதலாம்னா, ஒண்ணும் தோணமாட்டேங்குது.அதுனால..)

வேர்கடலையும், செருப்பும், புத்தகமும் மற்றும் மேட்டர் சிடியும்

ஒரு நாள் நண்பர் ஒருவருடன் சினிமாவிற்கு போக பஸ்சுக்காக காத்துக்கொண்டிருந்தேன். பஸ் வரக்காணோம். சற்று நேரம் பேசிக்கொண்டிருந்தோம்.

அருகே ஒரு தள்ளுவண்டியில் ஒருவன் வேர்க்கடலை விற்றுக்கொண்டிருந்தான். வறுக்கும் வாசனை வந்து கொண்டிருந்தது. நண்பர் வேர்கடலை வாங்கலாம் என்றார். அவன் இரண்டு பேருக்கும் கொடுத்துவிட்டு "3 ரூவா குடு சார்" என்றான்.

நண்பர் பணத்தை கொடுத்துவிட்டு என்னிடம் மெதுவாக சொன்னார். “பாருங்க சார் அநியாயம் ஐம்பது காசு பெறும். கூசாமல் 1.50 சொல்கிறான்" என்றார்.

“சார் அவன் 100 பேருக்கு விற்று தான் ரூ 100 பார்க்க முடியும். நீங்களே சொல்லுங்க, அவனுக்கும் குடும்பம் குட்டி இருக்கும். என்ன பண்ணுவான்” என்றேன்.


இப்படி பேசிக்கொண்டே நடந்து கொண்டிருந்த போது அவர் செருப்பு அறுந்து விட்டது.

பஸ் ஸ்டாப் அருகே இருந்த செருப்பு தைப்பவரிடம் கொடுத்து எவ்வளவு என்று கேட்டார்.

“பன்னெண்டு ரூவா ஆகும் சார் வேணா பத்து ரூவா குடு.”

நண்பர் 6 ல் ஆரம்பித்து 8 ரூபாயில் பேரம் முடித்தார்.

ஒருவழியாக தைத்து முடித்து வாங்கிக்கொண்டு கிளம்பினோம்.

நண்பர் சொன்னார். “பத்து நிமிடம் ஆகியிருக்குமா? சின்ன வேலை இதற்குப் போய் பன்னெண்டு ரூவா கேட்டான்”

“விடுங்க சார் நாள்பூரா காத்திருக்க வேண்டும். ஒரு பத்துப் பேராவது வந்தால் தான் அவனுக்கு இன்றைய பொழுது ஓடும்.” என்றேன்.

இப்பொழுது பஸ் வந்து விட்டது.

ஏறி இறங்கி தியேட்டர் நோக்கி நடந்தோம்.

பிளாட்பார்மில் ஒரு புத்தகக் கடையைப் பார்த்தேன். பலவகையான புத்தகங்கள்! நாவல்கள், கதைகள், கட்டுரைகள் சரோஜாதேவி புக்ஸ் கூட இருந்தது.

சில பாக்கெட் நாவல்கள் எடுத்து விலை கேட்டேன் மொத்தம் 70 ரூவா குடுங்க என்றான். பேரம் பேசி 30 ரூபாய் குடுத்துவிட்டு புறப்பட்டேன்.

நண்பர் ஏதோ கேட்க வாயெடுத்து பிறகு ஒன்றும் சொல்லாமல் வந்தார்.

அடுத்து ஒரு சிடி கடையைப் பார்த்தேன். பிளாட்பார்மில் கடை விரித்திருந்தான்.
விசிடி, எம்.பி.3, பழைய பாடல்கள், புதிய பாடல்கள், காமெடி, ஒலியும் ஒளியும், படங்கள். இன்னும் நிறைய இருந்தது.

“எவ்வளவுப்பா?” “சார் 35 ரூவா உங்களுக்கு 30 ரூவாக்கி தர்றேன்.”

“25க்கு தருவியா?”

அவன் முனகிக்கொண்டே, “சரி சரி எடு சார்” என்று சொல்லிவிட்டு அடுத்த வியாபாரத்தை கவனிக்க ஆரம்பித்தான்

சில எம்.பி.3 சிடி செலக்ட் பண்ண்டிக்கொண்டிருக்கும் போது நண்பர் பொறுக்க முடியாமல் கேட்டார் “உங்களுக்கே தெரியும் சொல்லுங்கள் ஒரு சிடி அடக்கவிலை எவ்வளவு? 25க்கு கேட்கிறீர்களே. அநியாயம்! என்னை மட்டும் சொல்றீங்க.?

Blank CD எவ்வளவு? “8 அல்லது 10 ரூவா”
CD Recording ? 6 அல்லது 8 ரூவா”
Label printing, Plastic cover?

“என்ன...மொத்தம் 22 ரூவா இருக்கலாம். அப்படியும் லாபம் தானே?” என்றேன்.

நண்பர் “1 சிடிக்கு 3 ரூவாயா? இவனுக்கும் குடும்பம் இருக்கலாம்” எப்ப எவ்வளவு சிடி வித்து சம்பாதிப்பது, குடும்பத்தை நடத்துவது?” என்றார்.

இப்பொழுது சிடிக்காரன் “எடுத்தாச்சா சார்” என்றான். “ஆச்சுப்பா”

“சார் ‘மேற்படி சிடி’ கேக்குறார்” என்றேன்.
“என்ன?”

“சார் ‘மேட்டர் சிடி’ கேக்குறார்பா” என்றேன்” நண்பர் கேட்கவேயில்லையே என்று விழித்தார்.

சிடிக்காரன் அவரிடம் திரும்பி “எல்லாம் இருக்கு சார், 80 ரூவா, வேணா சாருக்காக 70 ரூவாக்கி தரலாம்.”

“என்னிடம் குனிந்து என்ன சொல்றான்” என்றார்

“மேட்டர் சிடி, அதாவது ஷகிலா, மரியா, ரேஷ்மா, பிரதிபா, சஜினி, மலையாளப் படம், அஞ்சரைக்குள்ள வண்டி, மழு, பிடிக்கிட்டாப் புள்ளி, அவளோட ராவுகள், அடல்ஸ் ஒன்லி, புளூ பிலிம், ‘ஒரு மாதிரி’ சிடி எல்லாம் இருக்காம்!”

நண்பர் என்னை முறைத்தார்.

“சார் 60க்கு எடு சார் நாலஞ்சு தான் பாக்கி, இன்னிக்கு 30, 35 தான் கொண்டுவந்தேன்.”

கடைக்காரனிடம் எம்.பி.3 க்கு செட்டில் செய்து,
“அவர் மிட்நைட் மசாலா பார்த்துக்கிறாராம். இன்னொரு நாள் பாக்கலாம்.” என்று விட்டு நகர்ந்தேன்.

நண்பரிடம் சொன்னேன், “கேட்டீர்களா ! சாயங்காலம் ஆரம்பித்து கிட்டத்தட்ட 30 மேட்டர் சிடி வித்திருக்கான் 30 x 30 தொள்ளாயிரம் லாபம்!
இவன் நம் வியாபாரத்தை நம்பியில்லை. புரிந்ததா?

என்றாவது ஒரு நாள் அவர் மேற்படி சிடியை 45க்கு பேரம் பேசிக்கொண்டிருக்கலாம்! கருப்பு பேண்ட், ரோஸ் கலர் முழுக்கை சட்டை. (இன் பண்ணாமல்) பார்த்தால் விசாரித்ததாக சொல்லுங்கள்! பார்த்து ரொம்ப நாளாகிறது !.

No comments: