ஊர் திருவிழா மற்றும் பொங்கல் சமயங்களில் ஜல்லிக்கட்டு நடப்பது வழக்கம்.
எவ்வளவோ முயற்சித்தும் பலமுறை கலந்து கொள்ள முடியாமல் போய்விட்டது.
ஆண்டுதோறும் நடக்கும். இந்த ஆண்டு நடத்த மாவட்ட நிர்வாகம் அனுமதி மறுத்ததால் கிராமத்தினர் சார்பில் மதுரை ஐகோர்ட் கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டது. சுப்ரீம் கோர்ட் வழிகாட்டுதல் படி நடத்த கோர்ட் உத்தரவிட்டது.
இந்த முறை ஊரில் இருந்தேன். தோதாக லீவு வேறு.
இந்த முறை எப்படியும் ஒரு கை பார்த்துவிடுவது என்று முடிவு செய்தேன்.
ஆரம்பிப்பதற்கு வெகு முன்னரே சென்றுவிட்டேன்.
நூற்றுக்கும் மேற்பட்ட காளைகள் தொழுவத்தில் அடைக்கப்பட்டிருந்தன.
ஏகப்பட்ட போலிஸ் பாதுகாப்பு வேறு.
ஆரம்பித்து விட்டது. காளைகள் ஒவ்வொன்றாக வர ஆரம்பித்தன.
எதிர்பட்ட அனைவரையும் முட்டிமோதி தள்ளிக்கொண்டு சென்றன.
கூரான கொம்பு, உருண்டு திரண்ட திமில். பார்பதற்கே பயங்கரமாக இருந்தன.
வர்ணனையாளர்கள் பீறிடும் இரத்தத்தையும் வர்ணித்து கொண்டிருந்தார்க்ள்.
தூக்கி வீசப்பட்ட இளைஞர்களை டாக்டர்கள் குழு அவசர சிகிச்சை செய்து கொண்டிருந்தார்கள்.
சிலருக்கு கை காலில் காயம். சிலருக்கு குடல் சரிந்து தூக்கிக்கொண்டு காப்பற்ற ஓடிக்கொண்டிருந்தார்கள்.
காளைகளின் கொம்புகளில் இரத்தம்.
வெளிநாட்டுப் பயணிகளும் ஆர்வமுடன் பார்த்துக்கொண்டிருந்தார்கள். ஒரு வெளிநாட்டுப் பெண்மணி ஊரில் இதைக் காட்ட வேண்டும் என்று ஆர்வத்துடன் வீடியோ எடுத்துக்கொண்டிருந்தார்.
ஒரு காளை என்னை நோக்கி வந்து கொண்டிருந்தது. நல்ல கூரிய கொம்பு. சிலுப்பிகொண்டும் உறுமிக்கொண்டும் இருந்தது. அதன் மேல் இரத்தகலராக இருந்தது.
குங்குமத்தை கொட்டியிருக்கிறார்களா? அல்லது யாரையும் முட்டிய இரத்தக்கரையா?
எனக்கு அருகில் வந்தது. என்ன ஒரு பத்து பனிரெண்டு அடி தூரம் இருக்குமா?
ரொம்ப நேரம் சுற்றி வந்தது. இன்னும் நெருங்கட்டும் பார்க்கலாம்.
கொம்பால் தரையை குத்திக் கிழித்தது. புழுதி பறந்தது. காலால் மண்ணை கீறியது. உறுமியது.
"யார் கிட்ட விளையாடுறே. வா ஒரு வழி பண்ணிடறேன்".
இன்னும் கொஞ்சம் அருகில் வந்தது. இப்ப திமிலை அமுக்கிப் பிடித்து ஒரேயடியா மோதி
மடக்கி விடலாம் என்று நினைத்தேன். அப்போ தான் பின்னாலேருந்து ஒருத்தன் துரத்திக்கொண்டு வந்தான். அடச்சே! நேராக ஒடிவிட்டது.
"அடேடே.. அப்புறம்".
அப்புறமென்ன.. எவ்வளவு நேரந்தான் தென்னை மரத்து மேலேயே இருக்கிறது?.
இறங்கி வீட்டுக்கு போயிட்டேன்.
Mar 5, 2009
Subscribe to:
Post Comments (Atom)
2 comments:
கலக்கலா இருக்குங்க ! நல்லவேளையா, எழுந்து பல் தேய்ச்சேன்னு முடிக்காம இருந்தீங்களே
நன்றி திரு மணிகண்டன்.
நீங்கள் தான் முதல் பின்னூட்டம் (எல்லாப் பதிவுகளுக்கும் சேர்த்து)
என் பதிவில் பின்னூட்டமெல்லம் வேலை செய்யவில்லையோ என்று நினைத்தேன்.
மீண்டும் நன்றி.
Post a Comment