Mar 27, 2009

மலை மேலிருந்து குதித்த அனுபவம்

ஆபிஸில் ஏகப்பட்ட வேலை. மீட்டிங் மீட்டிங் என்று நாள் முழுவதும் ஒரே பிசி. பல பிரச்னைகள் அலசப்பட்டன. நிறைய திட்டு வாங்கி பதில்லுக்கு திட்டி ஏகப்பட்ட களேபரம்.

எல்லோரும் வீட்டுக்கு கிளம்பும் போது திடீரென்று கணேஷ் சொன்னான்.

“நாளைக்கு மலை மேலிருந்து குதிக்க போகிறேன்”

எனக்கு ஒன்றும் புரியவில்லை. ஏதோ உளருகிறான் நாளைக்கு பார்ப்போம் என்று விட்டுவிட்டேன். எனக்கு இருந்த வேலையில் ஒரே களைப்பாக இருந்ததால் படுக்க சென்று விட்டேன்.

அன்று லீவாகையால் நிதானமாக எழுந்தேன்.

கணேஷைக் காணவில்லை. அவன் முன்பே எழுந்து வெளியில் சென்று விட்டதாகக் கூறினார்கள். இன்னும் சிலரும் கூட சென்றிருப்பதாக சொன்னார்கள்.


நானும் இன்னும் சிலரும் விசாரித்துக்கொண்டு அவர்கள் சென்ற இடம் தேடிச் சென்றோம்.

மிக உயரமான மலை. பள்ளத்தாக்கு. அவ்வளவு உயரத்தில் இருந்து குதித்தால்?

ஒரே கூட்டமாக இருந்தது. கிட்டே போய் பார்த்தப்புறம் தான் கொஞ்சம் புரிந்தது. அது ஒரு சுற்றுலா தலம்.



கை கால் இடுப்பு என்று பிணைத்து உடலில் ஒரு பலமான பெல்ட் கட்டிக் கொண்டு உயரத்தில் இருந்து குதித்து பின் மின் மோட்டார் மற்றும் இரண்டு உதவியாளர்களைக் கொண்டு மேலே தூக்கி விடுவார்கள்.



காசுகொடுத்து இதெல்லாம் செய்யவேண்டுமா?

சில வெள்ளைக்கார ஆட்கள் குதித்தார்கள். சிலர் ஜோடியாக குதித்தார்கள்

அடுத்து எங்கள் டீம் …
முதலில் கணேஷ்.. பெல்ட் கட்டிக்கொண்டு ரெடியானான். உச்சியில் விளிம்புக்கு அருகே வந்து நின்றான்.



குதிக்கப்போறேன்.. குதிக்கப்போறேன் என்று பாவ்லா காட்டிக்கொண்டிருந்தான்.

க்யூ பெரிசாகிக்கொண்டிருக்கவே.. ஊழியர் பொறுமையில்லாமல் திடிரென்று தள்ளிவிட்டார். அப்படியே ஒரு 600 அடி பள்ளம் இருக்கும்.




கொஞ்ச நேரம் அந்தரத்தில் தொங்கிக் கொண்டிருந்தவனை மோட்டார் போட்டு மேலே தூக்கிவிட்டார்கள்.

எனக்கு பகீரென்று இருந்தது. கீழே குனிந்து பார்த்தால் வாந்தி வந்துவிடும் போலிருந்தது. பெல்ட் அறுந்து விழுந்தால் என்ன ஆகும்?
என்னதான் பலமான பெல்ட் என்றாலும் எதற்கு ரிஸ்க்.? பிழைக்க வந்த இடத்தில் இதெல்லாம் தேவையா? என்று நினைத்தேன்.



எல்லோரும் குதிக்கவே எனக்கும் ஆசை வந்து விட்டது. ஊரில் போய் போட்டோவெல்லாம் காட்டலாமே என்று நினத்தேன்.

கட்டணம் விசாரித்தால் அநியாயத்திற்கு சொன்னார்கள். ஒரு நாலைந்து நாள் ஓட்டலில் சாப்பிட்டுவிடுவேன்.

நான் ஒரு ஐடியா பண்ணினேன். அங்கிருந்த ஊழியரிடம் கேட்டதில் அவரும் ஒத்துக்கொண்டார்.

என் (இம்சை அரசன்) ஐடியா இது தான் (வீட்டில் சொல்லிவிடாதீர்கள்). பெல்ட் எல்லாம் கட்டிக்கொண்டு குளோசப்பில் ஒரு போட்டோ எடுத்துக்கொள்ளவேண்டியது. பிறகு வேறு யாரோ குதிக்கும் ஒரு போட்டோ லாங் ஷாட்டில் எடுத்து கொள்ள வேண்டியது (லாங் ஷாட்டில் லைட்டிங் சரியில்லாததால் முகம் சரியாகத் தெரியவில்லை என்று சொல்லிவிடலாம்). என் ஆல்பத்தில் இரண்டையும் பக்கம் பக்கத்தில் ஒட்டிவிட வேண்டியது.

இப்படியாக நான் மலை மேலிருந்து குதித்த அனுபவம் இனிதே முடிந்தது.

No comments: