ஒரு நாள் பஸ்சுக்கு காத்திருந்தேன். சற்று தள்ளி ஒருவன் தள்ளுவண்டியில் திராட்சை விற்றுக்கொண்டிருந்தான். பஸ் ஸ்டாப்பில் அவ்வளவாக கூட்டம் இல்லை. அப்பொழுது தான் ஒரு பஸ் போயிருக்க வேண்டும்.
தள்ளுவண்டிக்காரன் என்னிடம் பேச்சுக்கொடுத்தான்.
“என்ன சார் பஸ்சுக்கு நிக்கிறீங்களா?”
(இது என்ன கேள்வி? பின்ன பிளேனுக்கா நிக்கறேன்?)
“ஆமாப்பா, எப்ப வரும்னு தெரியல.”
“எனக்கும் தெரியாது சார், நான் இன்னைக்கு இங்க நிப்பேன், நாளைக்கு ரெயிலடியில இருப்பேன். அடுத்த நாள் இன்னொரு எடம்“
“என்ன வெயில் சார். ரெண்டு நாளா நல்ல மழை இன்னிக்கு எப்பிடி வெயில் அடிக்குது”. சொல்லிக்கொண்டே மூக்கை சிந்தி சற்று தள்ளி உதறினான்.
“உங்களுக்கு ஒரு அரைக்கிலோ போடவா? அருமையான திராட்சை சார். கொட்டையில்லாதது. சீசன் முடியப்போகுது மகாராஷ்டிராவில இருந்து வரணும். டிசம்பர்ல ஆரம்பிச்சு ஏப்ரல் வரைக்கும் இருக்கும்”.
“வேண்டாம்பா நேத்துத் தான் அரை டஜன் வாழைப்பழம் வாங்கினேன் இன்னும் அப்பிடியே இருக்கு. அப்புறம் பார்க்கலாம்”
(மூக்கை சிந்தி.. அந்தப்பக்கம் திரும்பி உதறிவிட்டு கால் சட்டையில் துடைத்துக் கொண்டான்)
“என்னப்பா ஜலதோசமா?”
“ஆமா சார் தடுமன் புடிச்சுகிச்சு, ரெண்டு நாலா மழைல்ல”
“ஏம்பா கர்சீப் எதுவும் கொண்டு வரலையா?”
“துண்டா சார்? என்னா சார் செய்றது அவசரத்தில வந்திட்டேன்.”
“ஏம்பா இந்த பழத்தில் தண்ணியெல்லாம் தெளித்து கழுவலாமே”
“அட நீங்க ஒண்ணு தண்ணி ஊத்துனா அப்பிடியே அழுகிடும்”
ர்ர்ர் ர்ர்ர் ர்ர்ர் என்று சத்தத்துடன் சளியை உதறினான்
(இந்த முறை கால் சட்டையில் துடைத்துக்கொள்ளவில்லை போல இருக்கே?)
“ஒரு நாளைக்கு எவ்வளவு மெட்ராசுக்கு வருதுன்னு நினனக்கிறீங்க. சுமார் 100 டன். விலை இறங்கிப்போச்சு சார் வித்து தள்ளியாகணும்.
ஒரு பெட்டிக்கு அஞ்சு கிலோ ரூ 180க்கு எடுக்கிறோம்.
மீண்டும் ர்ர்ர்…..ர்ர்ர்ர்ர்ர்ர்…..ர்ர்ர்ர்ர்.
“திராட்சை….திராட்சை அரைக்கிலோ இரூபது ரூபா” கத்தினான்
அப்பொழுது இன்னொருவர் பஸ் ஸ்டாப்பிற்கு வந்தார்.
“ஒரு அரைக்கிலோ போடுப்பா” என்றார்.
பழங்களை எடுத்துப் போட்டுக் கொண்டிருந்தான்
தராசுக்குள் கவனித்தேன் ஒரு மாதிரி வெளிர் பச்சையாக தெரிந்தது. சூரிய ஒளி பட்டு பளபளத்துக் கொண்டிருந்தது.
(திராட்சையும் தான்)
Mar 27, 2009
Subscribe to:
Post Comments (Atom)
1 comment:
TEST
Post a Comment