மாறுகண் அதிர்ஷ்டத்தின் அறிகுறியா?
மாறுகண்
ஒரு கண் மட்டும் அல்லது இரண்டு கண்களும் மாறுபட்ட திசையில் இருப்பது மாறுகண் எனப்படும்.
சிலருக்கு மாறுகண் எப்போதும் இருக்கும் மற்றும் சிலருக்கு அவ்வப்போது ஏற்பட்டு மறையும்.
மாறுகண் உடைய குழந்தைகள் பார்க்கும் போது, ஒரு கண் நேராகவும், மறு கண் உட்புறமோ, வெளிப்புறமோ, மேல்நோக்கியோ அல்லது கீழ்நோக்கியோ இருக்கலாம்.
உரிய காலத்தில் சிகிச்சை அளிக்காவிட்டால் சோம்பலுற்ற கண் என்ற நிலை உருவாகி நிரந்தர பார்வையிழப்பை ஏற்படுத்தும்.
மாறுகண்ணின் காரணங்கள்
பரம்பரையாக வருதல்
கண்தசைகள் பாதிக்கப்படுதல்
கண் தசைகளுக்கான நரம்பில் கோளாறு ஏற்படுதல்
கண்புரை, கருவிழி பாதிப்பு, கண் விழித்திரை கோளாறு, கண் நரம்பு கோளாறு, புற்று நோய்க் கட்டிகள், தூரப்பார்வை, கிட்டப்பார்வை ஆகியவற்றால் ஏற்படும் குறைவான பார்வை
காயம்படுதல்
அறிகுறிகள்
ஒரு கண் மட்டும் அல்லது இரண்டு கண்களும் மாறுபட்ட திசையில் இருக்கலாம்.
பார்வையில் குறைபாடு இருக்கலாம்.
பிரகாசமான வெளிச்சத்தில் ஒரு கண்ணை மட்டும் மூடிப் பார்க்கக் கூடும்.
இரண்டு கண்களையும் இணைத்துப் பார்க்க முயற்சிக்கும் போது தலையைச் சாய்த்தோ அல்லது திருப்பியோ பார்ப்பது போன்ற அறிகுறிகளும் சில சமயங்களில் தென்படலாம்.
சில சமயங்களில் பார்க்கும் பொருள் இரண்டாகத் தெரியலாம்.
மாறுகண் அதிர்ஷ்டத்தின் அறிகுறியல்ல. அது உங்கள் குழந்தையின் பார்வையையும் தோற்றத்தையும் பாதிக்கும்.
சிறு குழந்தைகளுக்கு மாறுகண் இருந்தால் இரண்டு வயதிற்குள்ளேயே உரிய சிகிச்சை அளித்தால் நிரந்தரமான பார்வை இழப்பைத் தவிர்க்கலாம்.
குழந்தை வளர்ந்த பிறகு, சிகிச்சை மூலம் வெளித்தோற்றத்தை மட்டுமே சரி செய்யலாம். இழந்த பார்வையைத் திரும்பப் பெற முடியாது.
நிரந்தர பார்வையிழப்பைத் தவிர்க்க சிகிச்சை முறைகள்
1. தூரப்பார்வை மற்றும் கிட்டப்பார்வையால் ஏற்படும் மாறுகண் உள்ளவர்களுக்கு தகுந்த கண்ணாடி அணிவிப்பதன் மூலம் பார்வையிழப்பைத் தவிர்க்கலாம்.
2. கண்களுக்கு பயிற்சி: மாறுகண் இல்லாத நல்ல பார்வையுடைய கண்ணை மறைத்து, மாறுகண் உடைய கண்ணால் பார்க்க வைப்பதன் மூலம், அந்த கண்ணின் பார்வையை மேம்படுத்தலாம்.
3. அறுவை சிகிச்சை:
நல்ல கண்ணை மூடி, மாறுகண்ணால் பார்க்க வைக்கும் பயிற்சி மற்றும் தகுந்த கண்ணாடி அணிவிப்பதன் மூலம், பார்வை மேம்பட்ட பிறகு மாறுகண்ணுக்கு அறுவை சிகிச்சை செய்து கொள்ளலாம்.
குழந்தைகளுக்கு மயக்க மருந்து கொடுத்து அறுவை சிகிச்சை செய்யப்படும் .
மயக்க மருந்து கொடுக்கப்படும் குழந்தைகளுக்கு, அந்த சமயத்தில் காய்ச்சல், ஜலதோஷம், இருமல் போன்றவை இருக்கக் கூடாது.
ஒரே சமயத்தில் இரண்டு கண்களிலுமோ அல்லது ஒரு கண்ணில் மட்டுமோ அறுவை சிகிச்சை செய்யலாம்.
விழி வெண்படலத்தில், அதாவது விழிக்கோளத்தின் வெள்ளைப் பகுதியில்தான் அறுவை சிகிச்சை செய்யப்படும்.
அறுவை சிகிச்சை முடிந்த பின் ஒரு நாள் மட்டும் மருத்துவமனையில் தங்கினால் போதும்.
இந்த அறுவை சிகிச்சை செய்வதோடு சிகிச்சை முடிந்து விடுவதில்லை. தெளிவான பார்வையைப் பெறத் தொடர்ந்து கண்ணாடி அணிய வேண்டியிருக்கலாம். நல்ல நிலையில் உள்ள கண்ணை மறைத்து, மாறு கண்ணால் மட்டும் பார்க்க வைக்கும் பயிற்சியை அறுவைச் சிகிச்சைக்குப் பிறகும் நீடிக்க வேண்டியிருக்கலாம்.
நன்றி :- மதுரை அரவிந்த் கண் மருத்துவமனை வெளியிட்ட சிறு கைப்பிரதி.
Jul 13, 2009
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment