Jul 23, 2009

தமிழ் அழியப் போகிறதா?

தமிழ் வாழ்க! தாய் மொழி வாழ்க என்று பலபேர் இங்கே கோஷம் போட்டுக் கொண்டிருக்க, அங்கே என்னவென்றால் பிள்ளைகளை ஆங்கிலம் கற்றுக்கொள்ளச் சொல்லுங்கள், பிள்ளைகளை ஆங்கில பள்ளிக்கு அனுப்புங்கள் என்று சொல்கிறார்கள். தமிழ்ப்பள்ளிக்கு அனுப்பினால் அவர்களின் குழந்தைகள் நன்றாக படிக்காதா? நம் பிள்ளைகளுக்கு நாம்தான் நம்முடைய தாய்மொழியைக்கற்றுக் கொடுக்க வேண்டும்.

ஒரு சிலர் தமிழ்ப் பள்ளிக்கு தன் பிள்ளையை அனுப்பமாட்டார்கள். ஆனால் தமிழ் பள்ளியில் பயிலும் மற்ற மாணவர்களைப் பார்த்துக் கேலி செய்கிறார்கள்.

தமிழனுக்கு தமிழ் என்ற உணர்வு முக்கியம். தமிழ் தெரிந்திருந்தும் தெரியாதது போல் ஆங்கில மொழியில் பேசுகிறார்கள். ஏன் தமிழ் என்றால் கசக்கிறதோ? நம்முடைய தமிழை வளர்க்க நாம்தான் போராட வேண்டும். எங்கேயும் எந்த இடத்திலும் நம் மொழி தமிழ்மொழி என்று பெருமையோடு நிமிர்ந்து நிற்க வேண்டும். தமிழர்கள் அனைவரும் தலைமுறை தலைமுறையாக வளர்ந்து வருகிறார்கள். ஆனால் தமிழ்மொழி மட்டும் தலைமுறை தலைமுறையாக அழிந்து வருகிறது. இது நம்மவர்களிடம் உள்ள தாழ்வு மனப்பான்மையே. தமிழ்ப்பள்ளிக்கு அனுப்பினால் தன் பிள்ளை நன்றாக படிக்க மாட்டார்கள் என்ற மூட நம்பிக்கை தமிழர்களிடையே பரவியுள்ளது. தமிழைக் கற்றுக் கொடுங்கள்; வீட்டில்தமிழில் பேசுங்கள்; தமிழ் நாளிதழ்களை வாங்கிப் படியுங்கள். நம் மொழியை நாம் தான் வளர்க்க வேண்டும் என்றெல்லாம் தமிழர்களுக்கே சொல்ல வேண்டிய நிலைமை வந்து விட்டது. தமிழ் மொழி தெரியாதவர்களிடம் வேற்று மோழியில் பேசலாம். தெரிந்தவரிடம் எதற்கு வேற்று மொழி? 'ஆங்கிலம்', ஆங்கிலம் என்றால் என்ன? அவர்களிடம்தானே முன்பு நாம் அடிமையாக இருந்தோம்.

தமிழன் தன்னுடைய தாய் மொழியை வைத்துக் கொண்டு மற்றவர்களுடைய மொழியை கடன் வாங்கி பேசுகிறார்கள். எதற்கு கடன் வாங்க வேண்டும்? தேவையில்லையே. நமக்குத் தான் நம் மொழிதமிழ்மொழி இருக்கின்றதே. மற்றவர்கள் தத்தம் மொழியை விட்டுவிட்டு நம் மொழியான தமிழ் மொழியில் பேசவில்லை. அவர்கள் அவரவர் சொந்த மொழியில்தானே பேசுகிறார்கள். நமது உரிமையை நாமே விட்டுக் கொடுத்தாற்போல் ஆகின்றதல்லவா. தமிழ் மொழி வளர தமிழர்களிடம் தமிழ் பேசுங்கள்.

தமிழனாக பிறந்து நமக்கே உரிய தமிழ் மொழியின் அருமை பெருமைகளை அறிய முற்பட வேண்டும். கல் தோன்றி மண் தோன்றா காலத்து முன் தோன்றிய மூத்த குடி வழி வந்த நாம் தீந்தமிழை கற்றுக் கொள்ளக் கடமைப்பட்டுள்ளோம்.

தமிழன் என்று சொல்லடா, தலை நிமிர்ந்து நில்லடா என்று சும்மாவா சொன்னார்கள். தமிழர்கள், தான் ஒரு தமிழன், என் தாய் மொழி தமிழ் என்று சொல்லிப் பெருமையடைய வேண்டும்.

தமிழ் மொழி உயர வேண்டும். தமிழ் மொழியும் தமிழ் பண்பாடும் வளர வேண்டும். தமிழர்கள்என்றென்றும் நிலைத்திருக்க வேண்டும் என்கிற எண்ணத்தில்தான், நமது முன்னோர்கள் அப்படிச்சொன்னார்கள். நம்முடைய மொழியை அடிப்படையிலிருந்து கற்றுக் கொண்டால்தான் அதன் முழு நன்மைகளும் கிடைக்கப் பெறலாம்.

தமிழில் கணக்கிட முடியாத அளவிற்கு புறநானுறு, பத்துப்பாட்டு, பழமொழி, திருக்குறள், ஆத்திசூடி, என்று இன்னும் அறிவுக்கு உகந்த புத்தகங்களும், நாவல்களும் தமிழில் இருக்கிறது. ஒவ்வொன்றும் படிப்பதற்கும், கேட்பதற்கும் மிகவும் இதமாகவும் தேன்போல் தித்திக்கும். ஆனால் தமிழை வெறுப்பவர் நம்மிடையே இருக்கத்தான் செய்கிறார்கள்.

தமிழ் மொழி நம்முடைய நடைமுறை வாழ்க்கைக்கு அவசியமாகிறது. ஆனால் பலபேர் இதை அறியாமல் ஏன் வெறுக்கிறார்கள் என்று புரியவில்லை? இந்த பூமியில் உள்ள எல்லா மரங்களையும் எழுது கோலாகவும், நம்மை சுற்றியுள்ள ஏழு கடலை மையாகவும் கொண்டு எழுதினாலும் நம்முடைய தாய்மொழியான தமிழ்மொழியின் சிறப்பை எழுதி முடிக்க இயலாது.

இப்படி உலகில் பல மூலை முடுக்குகளில் உள்ள அனைவரின் மனதிலும் பசுமரத்தாணிப் போல் பதிந்துள்ள தமிழை அழிக்கவும், மட்டம் தட்டிக் கவிழ்க்க நினைப்பதும் தகுமோ? தமிழ் என்றும் நமது வலதுகையைப் போல் பலம் கொண்டது. அந்த பலத்தை நாம் இழக்கத்தான் வேண்டுமா?

தன்னுடைய தாய்மொழியான தமிழை வெறுப்பவன், அவன் தன் உயிரையே வெறுப்பதற்குச்சமமானவன். அவரவர் சொந்த வேலையை கவனிக்கின்ற இந்த நேரத்தில் நான் மட்டும் ஏன் தமிழைப்பற்றி பொரிந்து தள்ளுகிறேன் என்று நீங்கள் நினைக்கக் கூடும். நானும் உங்களுக்கு துணைப் போகலாம். ஆனால் தமிழ் பற்றுத்தான் என்னை விடமாட்டேன் என்கிறது.

தமிழைப் பற்றி ஒரு கவிஞர் இப்படி கூறியுள்ளார். சாவிலும் தமிழ் படித்து சாக வேண்டும். எம் சாம்பலும் தமிழ் மகிழ்ந்து வேக வேண்டும்." தமிழ் என்பது நம்மில் உள்ள உயிருக்கு ஈடாகும். அதை வெறுத்தால் நாம் எப்படி உயிர் வாழ்வது. தாய்மொழி, என்னுடைய உயிர் என்று எண்ணுபவன் என்றும் மிழைவெறுக்கமாட்டான். தமிழை புறக்கணிக்கும் கூட்டத்திற்கு சாவுமணி அடிக்க வேண்டும். இப்பொழுதெல்லாம் தமிழ் கற்பதற்கு சிரமமில்லை. காரணம் கணினியின் வாயிலாகவும் தமிழ் கற்கும் வாய்ப்பை அறிவியல் நமக்குக் கொடுத்திருக்கின்றது.

ஒவ்வொரு முறையும் தமிழ் மொழிக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டியது ஒவ்வொரு தமிழனின் கடமையாகும். நம் மொழியின் எதிர்காலம் நம் கையில்தான் இருக்கிறது. தமிழர்களால்தான் தமிழ் மொழியை கட்டிக் காக்க முடியும்.

ஒரு சிலர் தனக்கு வயதாகி விட்டாலும், நான் கிழவன் இல்லை, எனக்கு இன்னும் வயதாகவில்லை என்று மிகவும் கட்டோடு இருப்பார்கள். அதேப்போல்தான் தமிழ் கற்கும்போது மனதில் தமிழ்ப்பற்று என்று ஒன்று இருந்தால் போதும், தமிழ் மட்டும் அல்ல தமிழ் புலவனாகவும் மாறலாம், மூதறிவுள்ளது வாழ்வு - நல்ல முத்தமிழ்க் கற்பது வாழ்வு, என்று தமிழ் கவிஞரான பாரதிதாசன் கூறியுள்ளார்.

இதுபோன்ற தமிழ் எழுத்தாளர், தமிழ் கவிஞர் என்று பலப்பேர் இருந்தார்கள். இப்பொழுதும் இருக்கிறார்கள். அவர்கள் எல்லாம் தமிழ் கற்று அதற்கு பெருமையைச் சேர்த்து, தமிழை வாழ வைத்தனர். வாழவைக்கின்றனர். இன்றுவரை அவர்களுடைய பெயரும் புகழும் அழியா சின்னமாக இருக்கிறது.

அவர்களும்தான் தமிழ் மொழியை கற்று வாழ்க்கையில் முன்னேறியிருக்கிறார்கள். அந்த காலத்தில் எந்தவொரு கல்வி சாதனங்களுமின்றி படித்து வாழ்க்கையின் அர்த்தமே தமிழில்தான் இருக்கிறது என்று புரிந்துக் கொண்டனர். அன்று அவர்கள் யாரும், நான் தமிழ் கற்றால், வாழ்க்கையில் முன்னேற மாட்டோம் என்று கருதவில்லையே. ஆனால் இக்காலத்தில் இவர்களுக்கு எதிர்மறையாக சில தரப்பினர்கள் கருதுவதால், பல தரப்பி னர்களை நம்பிக்கை இழக்க செய்கிறது. இதனால் தமிழ் கற்க விரும்புவோரும் கற்க மாட்டார்கள். இந்த செயல் தமிழுக்கு ஒரு பெரிய இழப்பை ஏற்படுத்த வாய்ப்புண்டு. அதனால் தமிழ் மொழி கற்க வி ருப்பம் இருந்தால் கற்று வாழ்க்கையில் முன்னேற முயற்சி செய்ய வேண்டும். அதைத் தவிர்த்து சாகடிக்க நினைப்பது கொடுமையாகும். அது தமிழை நேசிப்பவர்கள் இருக்கும் வரை நடக்காது. ஒருமொழித் தெரியாத ஊருக்கு போகிறோம். அங்கே நாம் பேசும் மொழி அவர்களுக்கு புரியவில்லை.

அவர் பேசும் மொழி நமக்கு புரியவில்லை. அந்த நேரத்தில் தம் மொழித் தெரிந்த ஒரு தமிழர் இருப்பாரா என்று தேடுவோம். ஆனால் அதே சூழ்லையில், நமக்கு வேற்றுமொழி தெரிந்து விட்டால் தமிழனை பார்த்தும் பார்க்காததுப் போல் வேற்று மொழிக்காரரிடம் சென்று பேசுவது கண்கூடு. அது ஏன்?

தொழில் ரீதியாக வேண்டுமானால் வேற்றுமொழி அவசியமாக கருதப்படுகிறது. ஆனால் தமிழர்களுக்கு வாழ்க்கை ரீதியாகப் பார்த்தால் தமிழ் மொழித்தான் மிகவும் முக்கியமாக கருதப்படுகிறது. ஆதலால் நாம் என்றும் நம்முடைய தமிழ்மொழியைக்கற்று வாழ்க்கையில் மென்மேலும் உயர்வோம் முன்னேறுவோம்.

தமிழர்களிடம் தமிழ் பேசுங்கள்!

மங்காத தமிழென்று சங்கே முழங்கு.பின்குறிப்பு : தலைப்பைப் பார்த்துவிட்டு யாரும் பீதி அடைய வேண்டியதில்லை!
தமிழ் கற்று, கற்பித்து, எழுதி, படித்து, பேசினாலே போதுமானது.
மெனக்கெட்டு புள்ளிவிபரம் :

தமிழ் பேசுகிறவர்கள் சுமார் எட்டரைக்கோடி.

2500 ஆண்டுகளுக்கு மேல் பழமையானது.

இந்தியா, இலங்கை, சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் அரசுமொழியாக அங்கீகாரம்.

10,000 க்கு மேல் தமிழ் கல்வெட்டுக்கள்.

இன்றைய தேதியில் தமிழ் இணைய தளங்கள் சுமார் 786,000 இருக்கின்றன!

இன்றைய தேதியில் தமிழ் வலைப்பூக்கள் சுமார் 42,946 இருக்கின்றன!

இப்பதிவில் 80 முறைக்கு மேல் தமிழ் என்கிற சொல் பயன்படுத்தப் பட்டுள்ளது!

மேலும் இது என்னுடைய பள்ளிக் காலங்களில் கட்டுரைப்போட்டிக்கு எழுதியதில்லை என்றும், மீள்பதிவு இல்லை என்றும் உறுதி கூறுகிறேன்.மேலும் விபரங்களுக்கு :

http://ta.pandapedia.com/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D

என்கிற சுட்டியில் பார்க்கவும்.

நன்றி.

4 comments:

STAR said...

கடந்த முந்நூறு வருடங்களில் இருந்து தான் இந்த மாற்றம் சினேகிதா , இபொழுது ஒய்வு நேரங்களில் சன் குழுமம் மற்றும் கலைஞர் தொலை காட்சி பார்த்தால் தமிழ் மறந்துவிடும் போல !

மெனக்கெட்டு said...

கருத்துப் பகிர்விற்கு நன்றி. மீண்டும் வருக.

பிரவின்குமார் said...

தமிழ் குறித்த தங்களது பதி(கி)ர்விற்கு மிக்க நன்றி.
இப்பதிவை படித்ததில் நானும் ஒரு தமிழனாய் மிகவும் பெருமையடைகிறேன்...
நானும் இது போன்று தமிழ் சம்மந்தப்பட்ட பதிவுகளை அதிகம் விரும்பி படிப்பவன்.. என்பதால்
மீண்டும் நன்றி நண்பரே....

Kavin said...

நிறையவே மெனக்கெட்டு உள்ளீர்கள். தமிழ் அழியாது என்று உறுதி கூறி ஆரம்பிக்கிறேன்.
திரு இந்திய நாட்டில் பல மொழிகளும் பல சமயங்களும் பல முகங்களும் உண்டு. இந்த பன்முகத் தண்மை தான் இந்தியாவிற்கு தனிப்பெரும் பெருமை என நமது பாசமிகு நேசமிகு காந்தியடிகளும், நேரு மாமாவும் சொல்லிவிட்டு தச்சின பாரத ஹிந்தி பிரச்சார சபா அரம்பித்தார்கள். அதாவது தென்னகத்தில் மட்டும் ஹிந்தி இல்லையே என்ற ஏக்கம் காந்திக்கு 1938இலேயே வந்து விட்டது. ராஜஸ்தானி, மராட்டி, குஜராத்தி, ஒரியா, போஜ்பூரி, மைதிலி போன்ற மொழிகளை அழித்து ஹிந்தி தேசமாய் மாற்ற திட்டம் தீட்டப்பெற்று நிறைவேற்றவும் செய்தனர் நமது மகாத்மாக்கள். எனது வகுப்பில் படிக்கும் பிஹாரி பெண்ணை கேட்டேன், "உனது தாய்மொழி என்ன?" கேட்ட அடுத்த நொடி ஹிந்தி என பதில் வந்தது. எனது அடுத்த கேள்வி "உனது பாட்டன் பேசிய மொழி ஹிந்தியா?". பலத்த யோசனைக்குப் பின் போஜ்பூரி, ராஜஸ்தானியின் சாயலில் பேசுவார்களாம். தொடங்கினேன் என் வேலையை. இதே கேள்வி நான் பார்த்த ஒவ்வொரு வடைந்திய மாணவனையும் கேட்டேன். ஒருவனுக்கு கூட ஹிந்தி தாய் மொழியாய் இருக்கவில்லை. அடையாளம் மறந்த கலாச்சார அடிமைகளாய் போனார்கள். செருப்பை கழட்டி அடித்தது நம்மவர்கள் மட்டுமே. தெலுங்கர்கள் கூட ஹைதராபாத்தில் ஹிந்தி தான் பெருமளவு பேசுகிரார்கள், கன்னடியர்கள் ஒரு படி மேலே. ஹிந்தி திரைப்படங்கள் தான் அவர்களது சொந்த மொழிப்படங்கள். இந்தியா, ஹிந்தியா ஆகிப்போனது. ஆனால், தமிழன், தமிழில் பேசவில்லை எனினும் இன்னும் தமிழைப் பற்றியாவது பேசிக் கொண்டு இருக்கிறான். அடையாளம் மறந்த அற்பர்கள் நாமல்ல. தமிழன் என்ற அடையாளம் சுமக்கும் வரையில் தான் நாம் சுயமரியாதை உடையவர்கள். இந்த உணர்வு உள்ளவரை தமிழ் வாழும். இதோ அடுத்த தலைமுறையில் நாங்கள் தயாராகிக் கொண்டு தான் இருக்கிறோம். MBA மாணவர்கள் நாங்கள் எங்கள் பல்கலைக் கழகத்தில், மேலாண்மைத்துறையில் தமிழ் பதங்களையும், திருக்குறளின் மேலாணமைத் தத்துவங்களையும் பரப்பிக் கொண்டு தான் இருக்கிறோம். மீண்டுமொரு முறை தமிழ் அழியுமா என அச்சம் தேவையில்லாதது, நாம் இன்னும் சாகவில்லையே. சரியா?