கம்ப்யூட்டர் துறையில் வேலை பார்ப்பவர்கள் ஒரு நாளைக்கு குறைந்தது எட்டு மணி நேரமாவது உழைக்கவேண்டிய கட்டாயம். இப்படித் தொடர்ச்சியாக பல ஆண்டுகள் பணிபுரிய வேண்டியதால் பல விதமான பிரச்சினைகள் ஏற்படுகின்றன.
இந்தப் பிரச்சினைகளுக்குத் தீர்வு அறுவை சிகிச்சைகளோ, மாத்திரைகளை விழுங்குவதோ அல்ல. சின்னச் சின்னதாக சில உடற்பயிற்சிகள், நம்முடைய உடலை ரிலாக்ஸ் ஆக்கிக் கொள்ளும் சில டெக்னிக்குகள், உட்கார்ந்திருக்கும் முறைகள் இவற்றைத் தெரிந்து வைத்திருந்தாலே போதும், எளிதாக துன்பத்திலிருந்து எளிதாகத் தப்பித்து வந்துவிடலாம்.
முதலில், உங்களுக்கு முன் இருக்கும் கம்ப்யூட்டர் திரை, உங்கள் கண் பார்வையிலிருந்து இரண்டு இஞ்ச் தாழ்வாக இருக்க வேண்டும். உங்கள் கண் பார்வையிலிருந்து கம்ப்யூட்டர் திரை உயரமாக இருக்கும் பட்சத்தில் நீங்கள் உங்கள் தலையைத் தூக்கித்தான் பார்க்க வேண்டும். அது உங்கள் கழுத்துக்கு அநாவசியமான வலியைக் கொடுக்கும். எனவே அந்த விஷயத்தில் ஜாக்கிரதையாக இருங்கள்.
எப்படி இதைச் சரி செய்வது?உங்கள் டேபிளின் உயரத்தைக் குறைத்துக் கொள்ளலாம். அல்லது நீங்கள் உட்கார்ந்திருக்கும் சேரின் உயரத்தை அதிகரிக்கலாம். கம்ப்யூட்டர் முன்பு உட்காரும்போது, ரோலிங் சேரைப் பயன்படுத்தினால் நல்லது. ரோலிங்சேர் மூலம் எளிதாக ஒரு பகுதியிலிருந்து இன்னொரு பகுதிக்கு நகர முடியும் என்பதோடு உயரத்தையும் அதிகப்படுத்தவோ, குறைக்கவோ முடியும். இந்த உயரத்தைச் சரிசெய்கிற விஷயத்தை நம்மில் பலரும் தெரிந்துகொள்வதே இல்லை. கம்ப்யூட்டர் பற்றி படித்தவர்கள் அனைவரும் இந்த உயரம் சரிசெய்கிற விஷயத்தை அவசியம் தெரிந்துகொள்ள வேண்டும்.
கம்ப்யூட்டர் முன்பு உட்காரும்போது, சேரில் சாய்ந்து உட்கார வேண்டும். சேரில் சாயாமல் நேராக உட்காருவதோ, கூன் போட்டு உட்காருவதோ கூடாது. கம்ப்யூட்டரில் உட்கார்ந்து டைப் செய்யும்போது, கைகள் இரண்டும் சேரின் கைப்பிடியின் மீது வசதியாக இருக்கிற மாதிரி பார்த்துக்கொள்ள வேண்டும். சில இடங்களில் கைப்பிடி மிகவும் கீழே இருக்கிறது அல்லது மிகவும் மேலே இருக்கிறது. இதனால் நமக்குத் தீமையே. இதைவிட, கைப்பிடி இல்லாமலிருப்பது நல்லது.
கம்ப்யூட்டரோடு பொருத்தப்பட்டிருக்கும் மௌஸ் பெரும்பாலும் அதற்குப் பக்கத்திலேயே இருக்க வேண்டுமே ஒழிய, டேபிளுக்கு மேலே தனியாக இருக்கக்கூடாது. மௌஸ் பக்கத்தில் இருந்தால்தான் அதை எளிதாக எட்டிப் பிடித்து பயன்படுத்த முடியும். மிக தூரத்தில் இருந்தால் கஷ்டப்பட்டு கையை நீட்டி மௌஸைப் பயன்படுத்த வேண்டியிருக்கும். அதனால் கைகளுக்கும், தோளுக்கும் பாதிப்புதான்.
இதேபோல கம்ப்யூட்டர் டைப் செய்ய உதவும் விசைப்பலகையும் மேல்பாகம் சற்று தூக்கலாகவும், கீழ்பாகம் சற்று இறக்கமாகவும் இருப்பதைவிட, கீழ்பாகம் சற்று தூக்கலாகவும், மேல் பாகம் சற்று இறக்கமாகவும் இருந்தால் நல்லது.
கம்ப்யூட்டரைத் தொடர்ந்து பார்ப்பதனால் கண்களுக்குப் பாதிப்பு ஏற்படும். மிக அதிக அளவில் பாதிப்பு ஏற்பட்டிருந்தால், ஒரு நல்ல கண் மருத்துவரை அணுகுவதுதான் சரியான விஷயம். ஆனால், கம்ப்யூட்டரால் கண்களுக்குப் பிரச்சினைகள் வராமல் தடுக்க சில பயிற்சிகளை மேற்கொள்ளலாம்.
உதாரணமாக, இருபது நிமிடங்களுக்கு கம்ப்யூட்டர் திரையையே நீங்கள் பார்த்துக் கொண்டிருந்தால் ஒரு பத்து வினாடிக்கு திரையிலிருந்து பார்வையை விலக்கி வேறு பக்கத்தில் உள்ள பொருளைப் பார்க்கலாம்.ஏன் இப்படிச் செய்கிறோம் தெரியுமா?சாதாரணமாக, நாம் ஒரு பொருளைப் பார்க்கிறபோதோ, புத்தகம் படிக்கிறபோதோ கண்களை மூடி மூடித் திறக்கிறோம். கண்களுக்குத் தேவையான குளிர்ச்சியும், எண்ணெய்ப்பசையும் கண் சிமிட்டலால் கிடைக்கிறது. ஆனால், கம்ப்யூட்டர் திரைகளை நாம் பார்த்துக்கொண்டே இருக்கும் பட்சத்தில் இந்தக் கண்சிமிட்டல் நடப்பதில்லை. இதனால் கண் பாதிப்படைகிறது. இதைப் போக்கத்தான் வேறு ஒரு திசையில் பத்து வினாடிகள் பார்க்க வேண்டும் என்று சொல்கிறேன்.
தொடர்ந்து ஐம்பது நிமிஷம் நீங்கள் கம்ப்யூட்டரில் பணிபுரிந்தால், ஒரு பத்து நிமிஷத்துக்கு வேறு ஒரு வேலையைச் செய்யலாம். உதாரணமாக, ஃபைல்களைக் கொஞ்சம் அடுக்கி வைக்கலாம். அல்லது போன் பேசலாம். லேசாக ஒரு நடை போட்டுவிட்டு வரலாம்.
இது மாதிரியான சின்னச் சின்ன விஷயங்களை கவனித்தாலே போதும், கம்ப்யூட்டரால் எந்தக் கஷ்டத்தையும் வராமல் பார்த்துக் கொள்ளலாம்.
நன்றி : டாக்டர் மது.
Jul 27, 2009
Subscribe to:
Post Comments (Atom)
6 comments:
நல்லதொரு பகிர்வு.
வாங்க 'துபாய் ராஜா'. பின்னூட்டத்திற்கு நன்றி.
மீண்டும் வருக.
கணினி பயன்படுத்துவோருக்கு இப்பதிவு ஒரு சிறந்த ஆலோசனை மருந்து.
பகிர்வுக்கு நன்றி பாராட்டுகள்.
பயனுள்ள பதிவு...
தேவையான பகிர்வு........
வாங்க பிரவின்குமார், முனைவர்.இரா.குணசீலன்
வருகைக்கு நன்றி. மீண்டும் வருக
Nammai polla Computer pani purivorku nalla alosanai Thanks
By
Bhuvana
Post a Comment