Jul 15, 2009

அவசர உலகில் அரங்கேறும் அநியாயங்கள்

வருவாயை அதிகரிக்கும் நோக்கோடு ஓடி ஓடி உழைக்கிறோமே. நமது வங்கிக் கணக்கில் பணம் அதிகரிக்கின்றது என்பது உண்மைதான். ஆனால் நாம் ஒரு செல்வத்தைத் தேடப்போய், இன்னொரு செல்வத்தை இழந்து கொண்டிருக்கின்றோம் என்பதை உணர்கின்றோமா? மேசையில் ஒன்றாக உட்கார்ந்து, ஒரு குடும்பமாக, நம்மில் எத்தனை பேர் உணவருந்துகின்றோம்? புள்ளி விபரங்களை நோக்கினால் சோகம்தான் எஞ்சுகின்றது. தேவைகளின் அதிகரிப்பும், அழுத்தமும், நம்மை ஓடி ஓடி உழைக்க வைக்கின்றன. வினோதமான, வித்தியாசமான நோய்கள் நம்மைத் தேடிவருகின்றன. சுருக்கமாகச் சொல்வதானால், அவசர உலகில், அரங்கேறும் அநியாயங்கள் இவை என்றே சொல்லவேண்டி இருக்கின்றது.

நம்மை விட்டுவிடுவோம். நமது சமுதாயத்தின் நாளைய தூண்கள் என்று வர்ணிக்கப்படும் நமது குழந்தைகள் நிலைமை இன்று எப்படியிருக்கின்றது? மகா சோகத்திலும் சோகமான நிலையே , இவர்களின் நிலையாக இருக்கின்றது.

Fast Food என்று நாகரீக உலகில் வர்ணிக்கப்படும், அவசர உணவு வகையறாக்கள், இன்று நமது பிள்ளைகளைக் கூறுபோட்டு வருகின்றன. இவற்றோடு, ஐஸ்கிரீம் வகையறாக்களும் கைகோர்த்து, நமது பிள்ளைகளைச் சிறுவயதிலேயே குண்டுப் பிள்ளைகளாக்கி வருகின்றன. இந்தக் கோலம், நமது இளைய சமுதாயத்தை, சர்வநாசமாக்கி வருவது, உலகறிந்த உண்மை.
குழந்தையிலேயே குண்டாவது என்பது இன்று உலகளாவிய பிரச்சினையாக உருவெடுத்துள்ளது.

கடந்த வருடம் எடுத்த கணிப்பொன்றின்படி, உலகம் முழுவதும் வசிக்கும் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளில் 22 மில்லியன் பேர், எடை அதிகரிப்போடோ அல்லது குண்டாகவோ காணப்படுகின்றார்கள். இதே அறிக்கையில், பத்துப் பிள்ளைகளை எடுத்தால், இதில் ஒரு பிள்ளை எடை அதிகரிப்போடு காணப்படுவதாகவும், உலகெங்கும் 5-17 வயதுவரை உள்ள 155 மில்லியன் பிள்ளைகள், எடை அதிகரிப்போடு காணப்படுவதாகவும் இவர்கள் சுட்டிக்காட்டியிருக்கின்றார்கள். இந்த 155 மில்லியன் தொகையினால், 30-45 மில்லியன் வரையிலானவர்கள், குண்டுப் பிள்ளைகளாகவே நோக்கப்படுகின்றார்கள். இந்தப் பிள்ளைகள், உலகெங்குமுள்ள மொத்தத் தொகையினால் 2.3 சதவீதம் என்று கணிப்பிடுகின்றார்கள். திடுக்கிட வைக்கின்றன இந்தப் புள்ளிவிபரங்கள்.

இங்கே நாம் ஒன்றைக் கவனித்தாக வேண்டும். வயதை மீறிய எடை அதிகரிப்புள்ள பிள்ளைகள் (Overweight) குண்டுப் பிள்ளைகள் (Obese) என்று இரு பிரிவுகளாக, பிள்ளைகளின் எடைகளை நிபுணர்கள் நோக்குகின்றார்கள். சாதாரண எடை, அதை மீறிய எடை என்று எல்லை மீறும் பிள்ளைகளின் எடை, பின்பு குண்டுப் பிள்ளை என்ற பட்டத்தைக் கொடுத்துவிடுகின்றது.

குண்டுப் பிள்ளைகளாக இருப்பவர்கள் தொகை, நாட்டுக்கு நாடு வேறுபடுகின்றது என்பதையும், ஆய்வு சுட்டிக்காட்டத் தவறவில்லை. உதாரணத்திற்கு எகிப்து நாட்டை எடுத்துக் கொண்டால், 4 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளில் 25 சதவீதத்தினர் குண்டாகவே காணப்படுகின்றார்கள். சிலி, பெரு, மெக்ஸிகோ போன்ற இலத்தீன் அமெரிக்க நாடுகளிலும், 4-10 வயதுக்கு உட்பட்ட பிள்ளைகள், குண்டாக இருப்பது, எகிப்தைப் போல, 25 வீதத்திற்கு அதிகமாக இருக்கின்றது.

குண்டாக இருக்கும் பிள்ளைகளை ஒருகணம் நினைத்துப் பாருங்களேன். பொதுவாக, குண்டாக இருக்கும் பிள்ளைகளை, ஏனைய பிள்ளைகள் தமது நண்பர்களாக ஏற்றுக் கொள்வது மிகக் குறைவு என்றே சொல்ல வேண்டும். பிள்ளைகளின் பார்வையில் மட்டுமல்ல, வளர்ந்தவர்கள் கூட, உடல் பருத்த பிள்ளைகளை, வேண்டத் தகாதவர்களாகவே நோக்குகின்றார்கள். சோம்பேறிகள், முட்டாள்கள், அருவருப்பானவர்கள் என்றெல்லாம் குண்டுக் குழந்தைகளை ஏனைய குழந்தைகள் வர்ணிப்பதுண்டு. தமது சிறந்த நண்பர் என்று, எந்தக் குழந்தையும், இன்னொரு குண்டுக் குழந்தையை ஏற்றுக் கொள்வதேயில்லை.

துறுதுறுவென்று, ஓடியாடித் திரியும் சுபாவம், குண்டான குழந்தைகளிடம் இருப்பதேயில்லை. பெற்றோர்களும் சமயாசயமயங்களில், குண்டாக இருக்கும் தமது குழந்தைகளைத் திட்டிவிடுவதும் உண்டு. ஆறு தொடக்கம் பத்து வயதுக்கு உடபட்ட பிள்ளையாக, குண்டுப் பிள்ளை இருந்துவிட்டால், ஏனைய பிள்ளைகளின் சீண்டல் எப்பொழுதுமே அதிகமாக இருப்பதுண்டு.

குண்டாக வந்துவிட்டால், ஒரு குழந்தைக்கு வரும் கசப்பான அனுபவங்களைப் பார்த்தீர்களா? ஒரு குழந்தை குண்டாக இருந்தாலென்ன, மெலிந்த உடல்வாகு கொண்டதாக இருந்தாலென்ன, ஒவ்வொரு பிள்ளையும், தான் பிறரால் நேசிக்கப்படுவதை ஆவலோடு எதிர்பார்க்கின்றது. சமுதாயம், இந்தப் பிள்ளையைப் புறக்கணிக்கத் தொடங்கும்போது, இந்தப் பிள்ளை மனோரீதியாகப் பாதிக்கப்படத் தொடங்கிவிடுகின்றது. விளைவுகளும் விபரீதமாகி விடுகின்றன.
எனவே நமது பிள்ளைகள், உடல் பருத்து, சமுதாயத்திலிருந்து ஒதுக்கப்படுதற்கு முன்பாக, அவர்கள் உணவுண்ணும் முறையில், பெற்றோர்களாகிய நாம் மிகுந்த கவனமெடுக்க வேண்டியது அவசியமாகின்றது.

ஐரோப்பிய நாடுகளில்தான் இந்தக் கோலம் என்றில்லை. ஆசிய நாடுகளையும், இந்தக் குண்டுக் கோலம் பற்றிப் பிடித்திருக்கின்றது. தாய்லாந்து நாட்டில் பொதுவாகவே எல்லோருமே மெலிந்த தோற்றம் உடையவர்களாகவே காணப்படுவதுண்டு. ஆனால் இங்கு அத்துமீறி நுழைந்துள்ள மேற்கத்திய கலாச்சாரத்தின் முத்திரையை, நாம் இன்று அங்கு காணக்கூடியதாக இருக்கின்றது.

இன்றைய நிலையில், தாய்லாந்தின் 14 வீதமான பிள்ளைகள் குண்டாகக் காணப்படுகின்றார்கள் என்பது அதிர்ச்சியான செய்திதான். மக்டொனால்ட்ஸ் போன்ற உணவகங்களின் படையெடுப்பும், அங்குள்ள உணவை நமது பிள்ளைகள் விரும்பி உண்பதும், இந்த விரும்பப்படாத நிலையைத் தோற்றுவித்திருக்கின்றது என்று சாடுகின்றார் ஒரு தாய். அது மாத்திரமல்ல கணினி முன்னால் உடகார்ந்தபடி, கணினி விளையாட்டுக்களை விளையாடுவதும், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைப் பார்ப்பதும், பிள்ளைகளைச் சோம்பேறிகளாக்கி இருக்கின்றன. உடற்பயிற்சி வெகுவாகக் குறைந்து வருகின்றது. இதுதான் இன்றைய பிள்ளைகளுக்கு கொழுத்த உடலைக் கொடுத்து வருகின்றது என்று அபிப்பிராயப்படுகின்றார் ஒரு தாய்.

பெற்றோர்களின் கவனத்திற்கு

இன்றைய பிள்ளைகளுக்கு, அதிக நேர உடற்பயிற்சி தேவைப்படுகின்றது என்கின்றது பிந்திய பீபீசி செய்தியன்று. வல்லுனர்களின் கருத்துப்படி, ஒரு பிள்ளை தினமும், 90 நிமிடங்களாவது, உடற்பயிற்சிக்குச் செலவிட வேண்டும் என்று சொல்லப்படுகின்றது.

பிள்ளைகள் பலவழிகளில், உடற்பயிற்சிகளை தினமும் மேற்கொள்ளலாம் என்கிறார்கள் வல்லுனர்கள். தினமும் பாடசாலைக்கு, மிதி வண்டிகளில் சென்றுவரலாம். இது ஒரு சிறந்த உடற்பயிற்சி என்பதில் சந்தேகமேயில்லை. பாடசாலைகளில், வெவ்வேறு விளையாட்டுகளில் பங்குபெற்றால், அதுவும் மிகச் சிறந்த உடற்பயிற்சியாகிவிடுகின்றது. பல பிள்ளைகளை , காரில் ஏற்றிச் சென்று, பாடசாலை வாசலில் பெற்றோர்கள் விட்டுச் செல்லும் கோலமே இன்று தொ¢கின்றது. பிள்ளைகளுக்கு சொகுசான வாழ்க்கை தேடி வந்திருப்பதாக, பார்வையில் தொ¢கின்றது. ஆனால் நிஜமோ வேறு. பிள்ளைகளின் உடல்நலம் நாசமாக்கப்படுகின்றது என்பதுதான் நிஜம்.

குண்டாக ஒரு பிள்ளை வருவதற்கு , தவறான உணவுப் பழக்கம் மாத்திரமல்ல, பரம்பரை உடல்வாகும் காரணமாகின்றது. பெற்றோர்களோ அல்லது பெற்றோர்களின் பெற்றோர்களோ உடல் பருத்தவர்களாக இருந்தால், பிள்ளைகள் குண்டாக வருவதற்கு , வாய்ப்புகள் அதிகம்.
ஏனைய பிள்ளைகளைப் போல, உங்களையும் நேசிக்கின்றோம் என்பதை, குணடாகி விட்ட பிள்ளைக்குத் தெரியப்படுத்தப் பெற்றோர்கள் தவறவேண்டாம்.

அதிக பழங்களை, மரக்கறி வகைகளை உணவில் சேர்த்துக் கொள்ளப் பழக்குங்கள். பிள்ளைகளைக் கொண்டே, கடைகளில் இவற்றைத் தெரிவு செய்து வாங்கும் பழக்கத்தை நடைமுறைக்குக் கொண்டுவாருங்கள். இனிப்புப் பண்டங்கள் வாங்கிக் கொடுப்பதை வெகுவாகக் குறைத்துக் கொள்ளுங்கள்.

உங்கள் பிள்ளை, காலை ஆகாரத்தைத் தவிர்க்காமல் பார்த்துக் கொள்வது, உங்கள் முக்கிய கடமையாகின்றது. காலை ஆகாரத்தைத் தவிர்க்கும் குழந்தை, களைப்போடும், பசியோடும் வீடு வரும். பல நொறுக்குத் தீனிகளை, பசி காரணமாகத் தேடும். இந்த நிலை வேண்டவே வேண்டாம். குடும்பமாக உட்கார்ந்து உங்கள் பிள்ளைகளோடு, ஒரு நாளில் ஒரு நேரத்திலாவது, உண்ணப் பழக்குங்கள். இந்த வழியில், உங்கள் பிள்ளை, பல்வேறுபட்ட உணவு வகைகளை விரும்பி உண்ணக் கற்றுக் கொள்ளும்.

ஓர் உணவை பிள்ளை உண்ண மறுத்தால், மனம் சோர்ந்துவிடாதீர்கள். பிள்ளையின் போக்கில் விட்டுவிடுங்கள். பிள்ளை தவிர்க்க நினைக்கும் உணவின் முக்கியத்துவத்தை அடிக்கடி சொல்லிக்காட்டுங்கள். மீண்டும் மீண்டும் முயற்சி செய்யுங்கள்.. பத்தாவது தடவை, நீங்கள் கொடுக்கும் உணவைப் பிள்ளை ஒருவேளை ஏற்றுக்கொள்ளலாம்.

கோலா அருந்துவதைக் குறைத்து, நீரை விரும்பி அருந்தும் பழக்கத்தைக் குழந்தைக்குச் சொல்லித் தாருங்கள். புதியதொரு பழக்கத்தைக் குழந்தைக்குச் சொல்லித் தருவதில், நிறையச் சிக்கல்களை நீங்கள் எதிர்நோக்கலாம். ஆனால் இந்த முயற்சியின் கனிகளைச் சுவைக்கும்போது, நீங்கள் அடையும் ஆனந்தம், வர்ணிப்புக்கு அப்பாற்பட்டது.

பிள்ளை விரும்பாத உணவைச் சாப்பிட்டால், பிள்ளை விரும்பும் ஓர் உணவு அதிகமாகக் கிடைக்கும் என்று இடையிடையே ஆசைகாட்டுங்கள். இங்கேயும் இலஞ்சமா என்று கேட்காதீர்கள். பிள்ளைகளின் அன்பைக் கவருவது, உங்களுக்கு மிகமிக அவசியமாகின்றது.
அளவில் கொஞ்சமாக உணவைப் பரிமாறுங்கள். பின்பு பிள்ளையோடு நயமாகப் பேசி, இன்னும் கொஞ்சம் உணவை ஊட்டுங்கள். இது பிள்ளைக்கு, உணவில் அதிக விருப்பை ஏற்படுத்த ஒரு யுக்தியாகும்.

அவசர உலகில், அறிவுரைகள் சொல்வது சுலபம். நடைமுறையில் கொண்டுவருவது மிகச் சிரமம் என்கிறீர்களா? மனமுண்டானால் இடமுண்டு என்பதை மறந்துவிட்டீர்களா? ஆர்வம் இருந்தால், நம்மால் எதையும் சாதிக்க முடியும். குண்டான குழந்தை என்பதால், ஏனைய பிள்ளைகளால் ஒதுக்கப்பட்டு, பலவற்றில் பின்னிற்கும் ஒரு நிலை, உங்கள் குழந்தைக்குத் தேவைதானா?

வேண்டவே வேண்டாம்.
இன்றே செய்வோம்.
நன்றே செய்வோம்.

சிறந்த ஆரோக்கியமே உயர்ந்த செல்வம் என்கிறார்கள்.

நன்றி : ஏ.ஜே.ஞானேந்திரன்

No comments: