Jul 21, 2009

இணையத்தில் அடி வாங்காமல் இருக்க.....

1 தமிழ் இணைய உலகத்தில் சுமார் 9 மாதங்கள் சுற்றிய பிறகு கற்றுக் கொண்ட சில விஷயங்களை தங்களிடம் பகிர்ந்து கொள்கிறேன். இணையத்தில் அடி வாங்காமல் இருக்க இதை பின்பற்றலாம்.

1. திகவை எதிர்த்து கருத்து சொல்லாதீர்கள் - நீங்கள் மேல்சாதி வெறியர் என்று தாக்குதலுக்கு உள்ளாவீர்கள்.

2. திமுகவை எதிர்த்து கருத்து சொல்லாதீர்கள் - நீங்கள் தமிழின துரோகி என்று முத்திரை குத்தப்படுவீர்கள்.அல்லது நீங்கள் அதிமுக என்று சொல்லி மேலும் அவமானப்படுத்திவிடுவார்கள்.


3. நதி நீர் பிரச்சனை
கிருஷ்ணா - ஆந்திர பக்கமும் நியாயம் இருப்பதாக நீங்கள் எழுதிவிட்டால் நீங்கள் ஆந்திராகாரர் என்று முத்திரை இடப்படுவீர்கள்.
முல்லைபெரியாறு - கேரள பக்கம் நியாயம் இருப்பதாக நீங்கள் எழுதிவிட்டால் நீங்கள் மலையாளக்காரர் என்று அடி வாங்குவீர்கள்
காவிரி - கர்நாடக பக்கம் நியாயம் இருப்பதாக நீங்கள் எழுதவும் வேண்டுமா. அடி வாங்க ஆசையா

4. ஹிந்தி
ஹிந்தி படித்தால் நல்லது பயனுள்ளது இப்படியெல்லாம் எழுதினால் நீங்கள் வடநாட்டுக்காரர். தமிழை அழிக்க முயலுபவர். வடநாட்டவரின் கைக்கூலி.

5. எழுத்தாளர்
ஒரு எழுத்தாளரை பாராட்டி பதிப்போ வலைப்பூவிலோ எழுதுவதற்கு முன்பு அவர் என்ன சாதியை சேர்ந்தவர் என்று தெரிந்துக் கொள்வது மிகவும் அவசியம். அது தெரியாமல் எழுதி மாட்டிக் கொள்ளாதீர்கள். அவர் சாதி பெரும்பான்மையாக இருந்தால் அவர் கதை நல்ல கதை என்று எழுதி தப்பித்துக் கொள்வது நல்லது.

6. திரைபடம்
எஸ்பிபி நன்றாக பாடுகிறார் என்று நீங்கள் எழுதினால் நீங்கள் ஆந்திரா ஜால்ரா
யேசுதாஸ் பற்றி எழுதினால் நீங்கள் மலையாளக்காரர்
ஏஆர் ரகுமான் பற்றி எழுதினால் நீங்கள் முஸ்லீம் என்று சொல்லி இந்துக்களின் தாக்குதலுக்கு உள்ளாக நேரிடலாம்

7. இதிகாசம்-புராணம்
ராமாயணம் மஹாபாரதம் பற்றி முடிந்த அளவு தவிர்க்கவும். அது ஆரியர்கள் எழுதியது. அதனால் திராவிடர்களுக்கு பிடிக்காது. ஏன் வம்பு. நீங்கள் ஐயோ நான் திராவிடன் தான் இருந்தாலும் ராமாயணம் பிடிக்கும் என்று சொன்னால் உங்கள் Birth Certificate ஐ இணையத்தில் போடுமாறு கேட்பார்கள்.

8. பிறப்பாலா வளர்ப்பாலா
நீங்கள் வலைப்பூவில் பின்னூட்டம் இடுவதற்கு முன்பு வலைப்பதிவர் பிறப்பால் தமிழரா வளர்ப்பால் தமிழரா என்று பார்த்து பிறகு பின்னூட்டம் இடவும். ஒருவேலை வளர்ப்பால் தமிழராக இருந்தால் உங்களுக்கும் ஆப்புதான்.

9. ஷ ஜ ஸ க்ஷ
இது போன்ற வடமொழி எழுத்துக்களை எழதினால் நீங்கள் தமிழில் கலப்படம் செய்கிறீர்கள். சமஸ்கிருதத்தை ஆதரிக்கிறீர்கள். தமிழ் ஆவலர்களால் உங்களுக்கு கண்டனம் வரலாம். அதனால் ஷாஜஹானை சாசகான் என்றும் கமலஹாசனை கமலகாசன் என்றும் ரஹ்மானை ரகுமான் என்றும் கிருஷ்ணனை கிருட்டிணன் என்றும் குறிப்பிடுவது நல்லது.

10. அடிவாங்காமல் தப்பிக்க எல்லா இடத்திற்கும் போய் வாருங்கள். படித்து வாருங்கள். அநாவசியமாக கருத்தை எழுதி கெட்ட பேர் வாங்காதீர்கள்.

11. பின்னூட்டம்
பின்னூட்டம் இடவேண்டும் என்று கை அரித்தால்-
ஒருவேளை நீங்கள் கருத்துக்களங்களில் உறுப்பினராக இருந்தால் விவாகாரமான தலைப்புகளுக்கு பின்னூட்டம் இடுவதற்கு முன்பு கவனிக்கவேண்டியவை. அந்த தலைப்பிற்கு சுமார் 10 பின்னூட்டம் வரை காத்திருங்கள். பிறகு அதில் பெரும்பான்மை அந்த தலைப்பிற்கு ஆதரவாக பேசினால் நீங்களும் அதற்கு ஆதரவாக எழுதிவிட்டு போவது நல்லது. நடுநிலையுடன் பேசுகிறேன் பேர்வழி என்று எதையாவது எழுதி வம்புக்கு ஏன் போகிறீர்கள்.

12. தினமலர் ஹிந்து போன்ற பத்திரிக்கைகளை மேற்கோள் காட்டினால் நீங்கள் ஆரிய கைக்கூலி. தினகரன் தமிழ் முரசு மேற்கோள் காட்டினால் நீங்கள் திராவிட கைக்கூலி. இணையத்தில் எது பெரும்பான்மை என்பதை பார்த்து நடந்துக் கொள்ளுதல் மிகவும் அவசியம்

13. சோ என்று தெரியாமல் கூட எழுத வேண்டாம். அச்சோ என்று எழுத நினைத்தால் அச் என்று நிறுத்திக் கொள்ளுதல் நல்லது

14. முடிந்த அளவு தமிழ் நாடு செய்வதெல்லாம் சரி தமிழர்கள் செய்வது எல்லாம் சரி என்றே எழுதுங்கள். நம் பக்கமும் தவறு இருக்கிறது என்று சொல்லி துரோகி என்று முத்திரைக்கு ஆளாகாதீர்கள்.

15. கடவுள்
கடவுளை பற்றி எழுத நினைத்தால் சைவ மதத்தை பற்றி மட்டும் எழுதினால் தப்பிக்க வாய்ப்பிருக்கிறது. சிவனை பற்றி மட்டும் எழுதினால் நல்லது. வேறு கடவுள்களை எழுதினால் அவர்கள் ஆரிய கடவுள் என்பதனால் நீங்கள் ஆரியர் என்ற அவபெயருக்கு ஆளாக நேரிடலாம். முடிந்தால் கடவுளை பற்றி எழுதுவதையும் மதங்களை பற்றி எழுதுவதை பற்றியும் தவிர்க்கலாம். கேட்கமாட்டேன் என்றால் அனுபவியுங்கள்

16. ஆக நீங்கள் அரசியல் எழுதினால் கட்சிக்காரர் என்றும் நீங்கள் இந்தியராக நினைத்து எழுதினால் பிற மாநிலத்தவர் என்றும் நீங்கள் கடவுளை பற்றி எழுதினால் இந்த மதத்தவர் என்றும் அதிலும் குறிப்பிட்ட கடவுளை பற்றி எழுதினால் இந்த இனத்தவர் என்றும் பார்த்து பார்த்து தாக்குதல் நடத்த ஒரு கூட்டம் கணினி படித்து தமிழ் பயின்று இணையத்தில் அலைகிறது. அவர்களுக்கு வேலையே இது போன்ற பதிவுகளை தேடிப்பிடித்து அசிங்கப்படுத்துவது தான்.

17. போகக்கூடாத இடங்கள்
1. மறைந்த தலைவர்களை பற்றி அசிங்கமாக எழுதும் வலைப்பூக்கள்
2. தமக்கு பிடிக்காத கருத்தை கூறும் வலைஞர்களின் பிறப்பை பற்றியும் குடும்பத்தை பற்றியும் தரக்குறைவாக எழுதும் வலைப்பூக்கள்
3. தமிழை எத்தனை கேவலப்படுத்தமுடியுமோ அத்தனை கேவலமான வார்த்தைகளை வரிக்கு நாலாக பயன்படுத்தும் தளங்கள்.

18. நான் செய்த தவறு
நான் செய்த தவறை நீங்களும் செய்யாதீர்கள். முதலில் தமிழ் இணையதளங்களை கண்ட மகிழச்சியில் எல்லா இடங்களிலும் நிஜ பெயர் விபரம் கொண்டு பதித்துக் கொண்டேன். தமிழ் இணைய உலகம் மிகவும் தரம் குறைந்த நிலையில் இருப்பதால் Anoymous ஆக இருப்பதே நல்லது. எனக்கு இப்போது முழுவதும் நனைந்துவிட்டதால் முக்காடு எதற்கு என்று விட்டுவிட்டேன்.

19. மதநல்லிணக்கமா - ஹா ஹா

நீங்கள் ஒரு மதத்ததில் இருந்து மற்ற மதத்தையோ பாராட்டி பேசினால் உங்களுக்கு இருமுனை தாக்குதல் தங்கள் மதத்திலிருந்தும் மற்ற மதத்தவர்களிடமிருந்தும் வரும்.
உங்கள் மதத்தவர்கள் - மத துரோகி என்றும்
மற்ற மதத்தவர்கள் - உளவாளி என்றும் உங்களை சொல்லக்கூடும். இதே ஃபார்முலா சாதிக்கும் பொருந்தும்.

20. கொசுறு

எதை செய்தால் இணையத்தில் பிரபலம் அடையலாம்.

நீங்கள் ஏதோ நல்ல கவிதை கட்டுரை கதைகள் எழுதினால் இணையத்தில் பிரபலம் அடையலாம் என்று எண்ணியிருந்தால் நீங்கள் ஒரு முட்டாள்.

வலைப்பூவை துவங்கி மிகவும் கேவலமாக கெட்ட வார்த்தைகள் அதிகம் கொண்ட பதிப்புகளை இடவேண்டும். அதை தமிழ் வலைப்பூ திரட்டிகளுக்கு அனுப்ப வேண்டும். பிறகு அவர்களே அதை பிரபல படுத்திவிடுவார்கள்.

நன்றி : லியோ மோகன்

7 comments:

cybersimman said...

சற்றே கிண்டலாக அமைந்தாலும் எல்லாமே சரியான கணிப்புகள்

Raja said...

முக்கியமானது, ஈழம் மற்றும் பிராபகரன் பற்றி எழுதினால் என்னாகும் என்பதைப் பற்றி நீங்கள் ஏன் குறிப்பிடவில்லை?

கிருஷ்ண மூர்த்தி S said...

அதுக்கு ஏங்க, இவ்வளவு நீளமா, விவரிச்சுகிட்டு?
சுருக்கமா, இரண்டே வரியிலே, சொரணையோடு இருக்காதீங்க, கேணப்பய ஊரில கிறுக்குப்பய நாட்டாமை, அதுனால கேணப்பயலாவே இருந்துடுங்கன்னு சொல்லிடலாமே!

சமுதாய வீதியி என்ற நாவலில் எழுத்தாளர் நா. பார்த்தசாரதி தன்னுடைய கதாநாயகன் சொல்வதாக, இப்படி எழுதியிருப்பார்:"அச்சமே கீழ்களது ஆசாரம்".

கீழேயே இருந்துவிட்டுப்போவதுதான் சௌகரியமென்றிருப்பவர்கள், உங்களுடைய பரிந்துரைகளின் படியே நடந்து கொள்வார்கள் என்று நம்புவோமாக:-)))

Muhammad Ismail .H, PHD., said...

// தமிழ் இணைய உலகத்தில் சுமார் 9 மாதங்கள் சுற்றிய பிறகு கற்றுக் கொண்ட சில விஷயங்களை தங்களிடம் பகிர்ந்து கொள்கிறேன். இணையத்தில் அடி வாங்காமல் இருக்க இதை பின்பற்றலாம். //


அட, வெறும் 9 மாதத்தில் இங்கு நடக்கும் அனைத்தையும் சரியாக க க க போ !!! உண்மையில் நீங்கள் திறமையான, கண்டிப்பாக இங்கே வாழும் தகுதி உள்ள நபர் தான். வாழ்த்துக்கள்.

with care & love,

Muhammad Ismail .H ,PHD,
gnuismail.blogspot.com

Praveenkumar said...

மெனக்கெட்டு எழுதியிருக்கீங்க....
அனைத்துக் கணிப்புகளும்
மிக அருமை...
மெனக்கெட்டு இது போல் நிறைய எழுதுங்க....
நாங்களும் மெனக்கெட்டு படித்து தெரிந்து கொள்கிறோம்....

மெனக்கெட்டு said...

வாங்க e!, Raja, கிருஷ்ணமூர்த்தி,
Muhammad Ismail .H, PHD,
பிரவின்குமார்

எல்லோருக்கும் நன்றி. மீண்டும் வருக!

வால்பையன் said...

தெளிவாத்தான் இருக்கிங்க!

நீங்க சொன்னதெல்லாம் செஞ்சா தான் பிரபலம் ஆக முடியும்னு ஒருத்தர் சொல்றாரே!